பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் தற்போது சிங்கப்பூரில் ஜனநாயகம் அதிகம் தழைத்தோங்குவதாக பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருதுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவான அம்சங்களை நுணுக்கமாக ஆராயும் அவர்கள், உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை எல்லாரும் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
அவ்வாறு செய்வது, சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறும் தேர்தலில் அரசாங்கத் தலைவர்களை மக்கள் தேர்வு செய்யக்கூடிய, சட்டம்-ஒழுங்கை அரசாங்கம் பாதுகாக்கக்கூடிய, சுத்தமான-லஞ்ச ஊழலற்ற அரசியலை நிலைநாட்டக்கூடிய ஜனநாயக நடைமுறைக்கு அவசியம் என்றும் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை உள்ளடக்கிய அறிக்கை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) வெளியிடப்பட்டது.
அதேநேரம், அரசியல்-குடிமை உரிமைகளில் தங்களுக்கு குறைவான முக்கியத்துவம் இருப்பதாக அவர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். போராடும் உரிமை, அரசியல் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பது போன்றவற்றை அதற்கு அவர்கள் உதாரணமாகக் கூறினர்.
ஆய்வில் பங்கேற்ற ஏறத்தாழ 1,000 பேரிடம் நான்கு அம்சங்கள் தொடர்பாக நான்கு கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது.
ஜனநாயக நிலைத்தன்மை, ஜனநாயக நடைமுறை, ஜனநாயக ரீதியிலான நல்லாட்சி, ஜனநாயகத்தின் அரசியல்-குடிமை உரிமை போன்றவை அந்த நான்கு அம்சங்கள்.
சிங்கப்பூரின் ஜனநாயகத்தை வலுவாக ஆதரிப்பதோடு நிலைமையை சிங்கப்பூரர்கள் நுணுக்கமாகப் புரிந்துகொண்டு உள்ளதை ஆய்வு கண்டறிந்ததாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்ட நிபுணர் யூஜின் டான் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு கட்சி ஆட்சிமுறை சிங்கப்பூரர்களை ஒரு சமூகமாக ஒன்றுதிரட்ட ஆளும் மக்கள் செயல் கட்சி அரசாங்கத்திற்கு உதவுவதாக அவர் கூறினார்.
ஜனநாயகம் என்பது என்ன, அது எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரியான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன, அரசியல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகளில் சிங்கப்பூரர்களை ஒருங்கிணைக்கவும் ஒரு கட்சி ஆட்சிமுறை உதவுவதாக அவர் தெரிவித்தார்.
ஆய்வு முடிவுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட கொள்கை ஆய்வுக் கழகக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் டான், ஜனநாயக நடைமுறைகள், அரசியல் அல்லது அரசு நிர்வாகத்தில் வேகமான மாற்றம் ஏற்படுவதை சிங்கப்பூரர்கள் விரும்புவது ஆய்வில் பிரதிபலித்ததாகத் தெரிவித்தார்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 35 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் பத்தாண்டுகளோடு ஒப்பிடுகையில் இன்றைய ஜனநாயகத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதுபோல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


