சிங்கப்பூரில் அருந்திய பின் பானப் போத்தல்களைத் திருப்பித் தரும் திட்டம் (BCRS) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திட்டம் முழுமையாக நடப்புக்கு வரும் காலம் மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த கருத்துகளை ஆராய்ந்த பிறகு அந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி, நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புறத்திற்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சனிக்கிழமை (ஜனவரி 3) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
மென்பானப் போத்தல்களைத் திருப்பித் தரும் திட்டம் என்பது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மென்பானப் போத்தல்கள், டின்களுக்குக் கூடுதலாக 10 காசுகள் கொடுக்க வேண்டும்.
மென்பானப் போத்தல்கள், டின்களை மறுசுழற்சி செய்வதற்காக வைக்கப்படும் பெட்டிகளில் போடும்போது 10 காசுகள் மீண்டும் திருப்பி வழங்கப்படும்.
இது 150 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் போத்தல், டின்களுக்குப் பொருந்தும்.
அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு மென்பானப் போத்தல்களைத் திருப்பித் தரும் திட்டத்தின் குறியீடு கொண்ட போத்தல்கள், டின்கள் மட்டுமே சிங்கப்பூரில் விற்கப்படும்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை மென்பானப் போத்தல்களைத் திருப்பித் தரும் திட்டத்தின் குறியீடுள்ள மற்றும் குறியீடு இல்லாத போத்தல்கள், டின்கள் விற்பனையில் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
குறியீடு இல்லாத போத்தல்கள், டின்களுக்குக் கூடுதலாக 10 காசுகள் கொடுக்கத் தேவையில்லை என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் குறியீடு இல்லாத போத்தல்களை விற்பனை செய்யப் போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்காகச் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நேரம் வழங்கப்பட்டுள்ளது.
பேரங்காடி, வர்த்தகப் பகுதிகள் எனப் பல்வேறு இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட மறுசுழற்சிப் பெட்டிகள் இருக்கும். அதில் குறியீடுள்ள போத்தல்களையும் கொள்கலன்களையும் போட்டு 10 காசு பெறலாம்.
இந்தத் திட்டம் 2033ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும். அதாவது ஏழு ஆண்டுகள்.
“சிங்கப்பூர் மறுசுழற்சி பொருளியலை நோக்கிச் செல்ல இது முக்கியமான படியாக உள்ளது. நெகிழியால் உருவாக்கப்பட்ட பானப் போத்தல்கள், உலோகத்தில் தயாரிக்கப்பட்ட பானக் கொள்கலன்களை மறுசுழற்சி செய்வது ஊக்கம் தரும்,” என்று திரு ஜனில் குறிப்பிட்டார்.
இனிவரும் நாள்களில் பொதுமக்களிடம் மென்பானப் போத்தல்களைத் திருப்பித் தரும் திட்டம் குறித்து கூடுதல் தகவல்கள் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. போதல்களில் எப்படிக் குறியீடுகளை அடையாளம் காண்பது, எந்த இடத்தில் போத்தல்களைப் போட்டால் 10 காசு கிடைக்கும் உள்ளிட்ட தகவல்கள் அவற்றுள் அடங்கும்.
பொதுமக்களிடமும் போத்தல் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள், உணவு பானக் கடைகள் எனப் பலதரப்பினரிடமும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் திட்டம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மூத்த துணை அமைச்சர் ஜனில் குறிப்பிட்டார்.

