பானக் கொள்கலன் திரும்பப் பெறும் திட்டம்: 380 இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் ‘எஸ்ஜி ரீசைக்கள்’

பானக் கொள்கலன் திரும்பப் பெறும் திட்டம்: 380 இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் ‘எஸ்ஜி ரீசைக்கள்’

2 mins read
33aff181-ead1-4ccc-b2a1-39f454c83851
பயன்படுத்தப்பட்ட காலி கொள்கலன்களை இந்த இயந்திரங்களில் போடும்போது, ஈஸி-லிங்க் அல்லது டிபிஎஸ் பேலா! மூலம் 10 காசு திருப்பித் தரப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ளூர் நிறுவனமான எஸ்ஜி ரீசைக்கள், ஏறத்தாழ 380 காலி கொள்கலன்களை ஏற்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் இத்திட்டம் தொடங்கும்போது பொதுமக்கள் பொறுமையுடன் இருக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெர்வின் இங் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதன்கிழமையன்று (மார்ச் 11) ஜூரோங் நிறுவனத்தின் தலைமையகத் திறப்பு விழாவில் பேசிய மெர்வின் இங், வைப்புத்தொகை முத்திரை உள்ள பிளாஸ்டிக் புட்டிகள் மற்றும் கலன்களை மட்டுமே இயந்திரத்தில் போடவேண்டும் என்று நினைவூட்டினார்.

“ஆரம்பத்தில், முத்திரை இல்லாத புட்டிகள் மற்றும் கலன்கள் இயந்திரத்தால் நிராகரிக்கப்படலாம். இதனால் பொதுமக்கள் சலிப்படைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மாற்றுக் காலத்தில் அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல், வைப்புத்தொகை முத்திரை கொண்ட புட்டி அல்லது கலன் பானங்களுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 காசு செலுத்தவேண்டும்.

பயன்படுத்தப்பட்ட காலி கொள்கலன்களை இந்த இயந்திரங்களில் போடும்போது, அந்த 10 காசு ஈஸி-லிங்க் அல்லது டிபிஎஸ் பேலா! மூலம் திருப்பித் தரப்படும்.

150 மில்லி முதல் மூன்று லிட்டர் வரையிலான புட்டிகள் மற்றும் கலன்கள் இத்திட்டத்தின்கீழ் வரும்.

புட்டிகள் நசுக்கப்படாமலும் அதன் உள்ளே திரவம் இல்லாமலும் இருக்க வேண்டும். இல்லையெனில் இயந்திரம் அவற்றை ஏற்காது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்த முத்திரை கொண்ட கொள்கலன்கள் சந்தையில் முழுமையாகக் கிடைக்கும். அதுவரை பழைய இருப்புகளை (முத்திரை இல்லாதவை) விற்க நிறுவனங்களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, எஸ்ஜி ரீசைக்கல் நிறுவனம் ஜூரோங், சுவா சூ காங் மற்றும் கிளமெண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடங்களின் தரைத் தளங்களில் கிட்டத்தட்ட 200 காலி புட்டி ஏற்கும் இயந்திரங்களை வைத்துள்ளது. ஒவ்வோர் இயந்திரமும் ஏறத்தாழ 1,000 கொள்கலன்களை ஏற்கக்கூடியது.

ஏப்ரல் மாதத்துக்குள் சிங்கப்பூர் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் இருக்கும்.

இதற்கிடையே, எஸ்ஜி ரிசைக்கள் மற்றும் அதன் பங்காளியான 800 சூப்பர் நிறுவனம் இணைந்து, 2027ஆம் ஆண்டிற்குள் பாசிர் ரிஸ் மற்றும் பிடோக் பகுதிகளில் 160 சிறப்பு மறுசுழற்சி தொட்டிகளை வைக்க இருக்கின்றன.

தவறான பொருள்களைத் தொட்டியில் போடுவதைத் தவிர்க்க, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, செயலி மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்