சிங்டெல் அல்லது மத்திய சேமநிதிக் கழகத்திலிருந்து பேசுவதாகக் கூறி, சிங்டெல் சிறப்புத் தள்ளுபடி பங்குகள் குறித்த ஆலோசனைகளை வழங்க யாராவது தொலைபேசியில் அழைத்தால், உடனடியாக அந்த அழைப்பைத் துண்டித்து விடுமாறு மத்திய சேமநிதிக் கழகம் (மசேநிதி) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அந்த நபர் பெயர் அல்லது அடையாள அட்டை எண்ணைக் கூறினாலும், தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவல்களைக் கோரும் தேவையற்ற அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
மே 12ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், மத்திய சேமநிதிக் கழகம் அந்த ஆலோசனைகளைத் தெரிவித்தது.
“தெரியாத குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல்களிலிருந்து வரும் இணையத்தளங்களுக்குச் செல்லவேண்டாம்; விரைவுத் தகவல் குறியீடுகளை (QR code) வருடவேண்டாம்; இணைப்புகளைச் சொடுக்கவேண்டாம்,” என்று மசேநிதிக் கழகம் கூறியது.
சிங்டெல் சிறப்புத் தள்ளுபடி பங்குகள் தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளும் sds.singtel.com என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மட்டுமே செய்யப்படவேண்டும் என்று அது தெரிவித்தது.
கடந்த 1993, 1996ஆம் ஆண்டுகளில் அந்தப் பங்குகளை வாங்கியவர்கள் தங்கள் பங்குகள் அனைத்தையும் விற்று ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது, இவ்வாண்டு நவம்பர் 21ஆம் தேதி, அந்தப் பங்குகளை மசேநிதிக் கழகத்திடமிருந்து தங்களின் தனிப்பட்ட மத்திய வைப்புக் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். எதிர்காலத்தில் தங்களுக்குத் தேவைப்படும்போது அந்தப் பங்குகளை அவர்கள் விற்றுக்கொள்ள முடியும்.
அதன் தொடர்பில், சிங்டெல் நிறுவனமும் மசேநிதிக் கழகமும் இணைந்து நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் பங்குதாரர்களுக்கு அஞ்சல் மூலம் விரிவான வழிமுறைகளை அனுப்பியுள்ளன.
மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சவால்களை எதிர்நோக்கும் 20,000க்கும் மேற்பட்டோருக்குக் கைகொடுக்கத் திட்டமிடுவதாக சிங்டெல் நிறுவனம் கூறியது.

