சிவப்பும் வெள்ளையுமாய் நிறைந்திருந்த சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கம் ஏறத்தாழ 42,000 பார்வையாளர்களின் உற்சாகக் குரல்களாலும் வண்ண மின்னொளிகளாலும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) அதிர்ந்தது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காலாங்கிற்குத் திரும்பிய சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு அதிநவீன தொழில்நுட்பத்துடனும் புதிய பரிமாணத்துடனும் களைகட்டியது.
‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!’ எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற 61வது தேசிய தினக் கொண்டாட்டம், சிங்கப்பூரர்களின் தளரா முயற்சியை உலகிற்குப் பறைசாற்றியது. உள்ளூர்ப் பிரபலங்களான ஜோக்கிம் கோமேஸ், ஹஃபிஸ் ரஹ்மான், உதய சௌந்தரி, சிசி லிம், குர்மித் சிங் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் அத்தியாயம் அணிவகுப்பு அங்கமாகும். அதனைத் தொடர்ந்து வந்த மீதமுள்ள ஐந்து அத்தியாயங்களில் பலதரப்பட்ட கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
மக்களோடு மக்களாக அணிவகுப்பு
மாலை 6.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்க, மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் கான் கிம் யோங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அதிபர்கள் டோனி டான், ஹலிமா யாக்கோப் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இம்முறை அணிவகுப்பு அங்கத்தில் 32 பிரிவுகள் பங்கேற்றன. அவற்றில் 26 பொதுமக்கள் பிரிவுகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் நடைபெற்ற அணிவகுப்புகளில் இதுவே மிகப் பெரிய பங்கேற்பாகும்.
அணிவகுப்புப் பிரிவினர் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதி வழியாக நடந்து சென்று மேடையை அடைந்தனர். சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு மன்றத்தின் பிரதிநிதிகள் அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்று கூடுதல் சிறப்பு சேர்த்தனர்.
மாலை 6.43 மணிக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் அரங்கிற்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து, 6.48 மணிக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரங்கை வந்தடைந்தார். அதற்கு பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, பொருளியல், சமூக, மின்னிலக்க, உளவியல் தளங்களைச் சார்ந்த பல்வேறு பொதுமக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ‘எஸ்ஜி கோ பியாண்ட்!’ எனும் எழுத்து வடிவத்தை ஆங்கிலத்தில் அமைத்துக் காட்டின.
அதேவேளையில், அரங்கின் மேற்குத் திறப்பு வழியாகத் தேசியக் கொடி வான்பறப்பைக் காணும் வாய்ப்பு அரங்கிலிருந்த பார்வையாளர்களுக்குக் கிடைத்தது.
முதன்முறையாக, 35வது சிங்கப்பூர்ப் போர்ப் பொறியாளர் படைப்பிரிவால் இயக்கப்பட்ட ‘எம்3ஜி’ மிதவைகளிலிருந்து, 23வது சிங்கப்பூர் பீரங்கிப் படைப்பிரிவினரால் காலாங் பேசின் பகுதியில் அதிபருக்கு 21 பீரங்கிக் குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய விளையாட்டரங்கின் செயல்பாட்டு, பாதுகாப்பு வரம்புகள் காரணமாக, சிங்கப்பூர் ஆயுதப்படையின் செஞ்சிங்க வான்குடை வீரர்களின் வான்சாகசங்கள், ராணுவப் படை வாகனங்களின் அணிவகுப்பு, போர் விமானங்களின் வான்சாகசம் போன்ற வழக்கமான அம்சங்கள் இவ்வாண்டு நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை.
கலைநிகழ்ச்சிகளின் சங்கமம்
அம்பு வடிவ மேடையில் அரங்கேறிய பல கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை ஈர்த்தன.
இரண்டாவது அத்தியாயத்தில், அன்றாட வாழ்வில் பிறருக்குச் சேவையாற்றும் எளிய சிங்கப்பூரர்களைச் சிறப்பிக்கும் வகையில், பாதுகாத்தல், வழங்குதல், உருவாக்குதல், கட்டியெழுப்புதல், பராமரித்தல், நீதியை நிலைநாட்டுதல் ஆகிய கருப்பொருள்களைப் பிரதிபலிக்கும் வண்ணமயமான 18 அலங்கார மிதவைகள் அரங்கை வலம் வந்தன.
‘ஷியோக் சிஸ்டாஸ்’ (Shiok Sistas) குழுவினர் ‘முன்னேறு வாலிபா’ உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்களைப் பாடியபோது, பார்வையாளர்களும் சேர்ந்து பாடி மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரின் கடல்சார் வரலாற்றையும் பல்லினப் பண்பாட்டையும் நினைவுகூர்ந்த மூன்றாவது அத்தியாயத்தில், ‘டமாரு சிங்கப்பூர்’ குழுவினரின் முரசு இசை முழங்கியது. பாடகர் அஸ்னிதா தாவூத் ‘ஓராங் லாவுட்’ மொழியிலும், பாடகர் சுஷ்மா சோமா கர்நாடக இசைப் பாடலையும் பாடி அசத்தினர்.
சோக்கா கெக்காய் அமைப்பின் 700 கலைஞர்களின் படைப்புகளும், மான் உருவப் பொம்மைகளுடன் அரங்கேறிய நிகழ்ச்சிகளும் ‘நாடா’ குழுவின் நவீன மின்னணு இசையும் பல்லினப் பண்பாட்டுச் சங்கமமாக உருவெடுத்தன.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீட்டெடுத்து, கடந்த காலத்தின் இனிமையான நினைவலைகளைக் கண்முன் நிறுத்தியது நான்காவது அத்தியாயம். மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த புகழ்பெற்ற ‘புவா சூ காங்’ கதாபாத்திரத்தில் குர்மித் சிங் தோன்ற, ‘வேட்டை’ நாடகத்தின் கருப்பொருள் பாடலை உதய சௌந்தரி பாடினார்.
ஐந்தாவது அத்தியாயத்தில் தொழில்நுட்பத்தின் உச்சத்தைக் காணமுடிந்தது. பாடகர் ஜாஸ்மின் சொக்கோ அரங்கின் கூரையிலிருந்து மேடைக்குக் கீழே இறங்கியவாறு 2026 தேசிய தினப் பாடலான ‘யூல் பி ஓகே’ பாடி அசத்தினார்.
300 உள்ளரங்கு ஆளில்லா வானூர்திகளின் ஒளிரும் அமைப்புகளுடன் வான்சாகசக் கலைஞர்களும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். அத்துடன், ஸ்ருதி நாயர் போன்ற உள்ளூர் நடனக் கலைஞர்களையும் சிறப்புத் தேவையுடைய கலைஞர்களையும் உள்ளடக்கிய நடனப் படைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆறாவது அத்தியாயத்தில் இமான் ஃபான்டி ‘ஜயன்ட்ஸ்’ பாடலைப் பாட, 61 பேர் அடங்கிய பொதுமக்கள் குழுவும் விளையாட்டு வீரர்களும் மேடையைச் சிறப்பித்தனர். கரேத் ஃபெர்னாண்டஸ், ட்ரூ சென் ஆகியோரின் ‘ஸ்பார்க்கல்’ பாடல் அரங்கை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.
ஒளிவெள்ளத்தில் மூழ்கிய அரங்கம்
தேசியப் பற்றுறுதியின் 60வது ஆண்டை நினைவுகூரும் வகையில், ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து 8.19 மணியளவில் பற்றுறுதி எடுத்து, தேசிய கீதத்தை மீண்டும் பாடினர்.
பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘எல்இடி’ மணிக்கட்டுப் பட்டைகள் அரங்கை ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்தன. மேடையில் அமைக்கப்பட்டிருந்த 170க்கும் மேற்பட்ட சிறப்புக் கருவிகள் மூலம் குறைந்த புகையை வெளியிடும் உள்ளரங்கு வாணவேடிக்கைகள் கண்ணுக்கு விருந்தளித்தன.
இறுதியில், புதிய வடிவம் பெற்ற பழைய தேசிய தினப் பாடல்களை அரங்கமே ஒன்றுசேர்ந்து பாடிய கூட்டுப் பாடல் நிகழ்ச்சியோடு சிங்கப்பூரின் 61வது பிறந்தநாள் விழா இனிதே நிறைவுற்றது.


