பக்தித் தீந்தமிழ் 2026: இளையர் படைத்த தமிழ் அமுது

மாலைமாற்று, திருஎழுகூற்றிருக்கை சித்திரக்கவிகளை விளக்கி வியக்க வைத்த இளையர்கள்

பக்தித் தீந்தமிழ் 2026: இளையர் படைத்த தமிழ் அமுது

2 mins read
1b645c32-b030-4137-9a75-d4dc009b3976
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் சமய பாடசாலை மாணவர்கள் படைத்த திலகவதியார் நாடகம்.  - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்
Google News Preferred Icon

தமிழறிவை ஆழமாகக் கற்கும் ஆர்வம் இருப்பவர்க்கு, பண்டைய பக்தி இலக்கியக் கல்வி பயனுள்ள படிக்கல் எனக் கூறப்படுவதுண்டு. இவ்வகையில் பக்தித் தமிழ்ப் பாக்களை இளையர்களும் சிறார்களும் கற்றறிந்து பாடலாகவும் ஆடலாகவும் உரையாகவும் படைத்தனர்.

இந்து ஆலோசனை மன்றத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற ‘பக்தித் தீந்தமிழ் 2026’ நிகழ்ச்சியில் இளம் பங்கேற்பாளர்களும் அங்கம் வகித்து தமிழமுது படைத்தனர்.

வாழ்க்கைக்கான செவ்விலக்கியம்

தமிழ் மொழியையும் அதன் பாரம்பரியச் செல்வங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முன்னோடி முயற்சியாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக வரவேற்புரை வழங்கிய இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் க.செங்குட்டுவன் கூறினார்.

உடலை வருத்திச் செய்யப்படும் காரியங்களைவிட மனத்தை ஒருநிலைப்படுத்தி அடையும் அமைதியே மேலானது என்ற திரு செங்குட்டுவன், கம்பரின் சரஸ்வதி அந்தாதி, குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை போன்ற பக்திச் செவ்விலக்கியங்களை மேற்கோள் காட்டி, அவற்றால் ஆற்றலும் அமைதியும் பெருகும் எனக் கூறினார்.

தமிழ் செம்மொழி என்ற நிலையைப் பெற்றதற்கு அதன் பக்தி இலக்கியங்களும் முக்கியக் காரணம் என்று மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசுதாஸ் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

பக்தித் தீந்தமிழ் 2026 நிகழ்ச்சி மேடையில் துணையமைச்சர் தினேஷ் வாசுவுக்கு க. செங்குட்டுவன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறார். இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ராஜன் கிருஷ்ணன் மேடையின் வலக்கோடியில் நிற்கிறார்.
பக்தித் தீந்தமிழ் 2026 நிகழ்ச்சி மேடையில் துணையமைச்சர் தினேஷ் வாசுவுக்கு க. செங்குட்டுவன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறார். இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ராஜன் கிருஷ்ணன் மேடையின் வலக்கோடியில் நிற்கிறார். - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

“இளையர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தைப் புரிந்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்தக் கருத்தரங்கம் நல்ல வாய்ப்பாக அமையும். அத்துடன், தமிழ்மொழியும் நமது பாரம்பரியமும் இளையர்கள் கையில் எடுக்கும்போதுதான் சிங்கப்பூரின் மண்ணில் அவை மேன்மேலும் வளரும்,” என்றார் திரு தினேஷ்.

பக்தி இலக்கியத் தமிழின் சிறப்பைப் பற்றி சிறப்புப் பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா எளிமையாக எடுத்துரைத்தார். ஒன்றரை மணி நேர உரையில் ஆன்மிகத் தகவல்களை நடைமுறைக்கு ஏற்பவும் நகைச்சுவையாகவும் அவர் பகிர்ந்தார்.

மரபின் மைந்தன் முத்தையாவுக்குப் பொன்னாடை.
மரபின் மைந்தன் முத்தையாவுக்குப் பொன்னாடை. - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

இளையர்களின் உயர்தரத் தமிழ்

இந்து இளையர் கட்டமைப்பினர், ‘திருப்பாவை’யின் மார்கழித் திங்கள் பாசுரத்தைப் பாடினர். தொடர்ந்து அந்தாதிச் செய்யுள் வகையை எளிமையாய் விளக்கினர். பின்னர் அபிராமி அந்தாதிப் பாடல்கள், சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘தில்லைவாழ் அந்தணர்’ எனத் தொடங்கும் திருத்தொண்டர் தொகை ஆகியவற்றைப் பாடினர்.

அதிபதி நாடகக்குழுவின் ‘தீந்தமிழில் அரியும் அரனும்’ என்ற நாடகமும் இடம்பெற்றது.

சிவபெருமான், திருமால், முருகன் ஆகியோராக நடித்தவர்கள், நல்ல தமிழை நகைச்சுவையுடன் பரிமாறினர். அவர்கள் நாடகத்தைப் படைத்த விதம், நிகழ்ச்சிக்கு இலகுத் தன்மையைச் சேர்த்தது.

அதிபதி நாடகக்குழுவின் ‘தீந்தமிழில் அரியும் அரனும்’ நாடகம்
அதிபதி நாடகக்குழுவின் ‘தீந்தமிழில் அரியும் அரனும்’ நாடகம் - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

பக்தி இலக்கியத்தின் சித்திரக்கவிதை உத்திகளை விளக்கி, அதனைப் பாடியும் காண்பித்த திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழுவினரின் திறமை, பார்வையாளர்களை மலைக்க வைத்தது.

திருமுறை மாநாட்டின் இளையரணி உறுப்பினர்கள் (இடமிருந்து) ஹர்ஷிதா பாலாஜி, சுபிக்‌ஷா பெரியகருப்பன், மகாலெக்ஷ்மி தினகரன் உள்ளிட்டோர் தேவாரங்களைப் பாடினர்.
திருமுறை மாநாட்டின் இளையரணி உறுப்பினர்கள் (இடமிருந்து) ஹர்ஷிதா பாலாஜி, சுபிக்‌ஷா பெரியகருப்பன், மகாலெக்ஷ்மி தினகரன் உள்ளிட்டோர் தேவாரங்களைப் பாடினர். - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்

திருஞானசம்பந்தரின் ‘யாமாமாநீ யாமாமா’ என்ற மாலைமாற்றுப் பதிகத்தின் சைவ சித்தாந்த மெய்யியல் பொருளுடன், வரிகளை முன்னிருந்து வாசித்தாலும், பின்னிருந்து வாசித்தாலும் ஒரே சொல் வரிசையையும் பொருளையும் தரும் பாடலின் எழுத்துக்கோவையை அழகாக விளக்கினர்.

சம்பந்தரின் ‘ஓர் உரு ஆயினை’ தேவாரத்தின் திருஎழுகூற்றிருக்கை (தேர் வடிவச் சித்திரக்கவிதை) பற்றியும் அவர்கள் படைத்திருந்தனர்.

நாயன்மார்களில் ஒருவரான திலகவதியார் பற்றிய நாடகத்தை ஸ்ரீ செண்பக விநாயகர் பாடசாலையின் இளம் மாணாக்கர்கள் படைத்தனர். வண்ணமயமான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்குக் களைகூட்டின.

குறிப்புச் சொற்கள்
இந்து அறக்கட்டளை வாரியம்சமயம்கலைஇசை நிகழ்ச்சிநாடகம்கவிதை