பாரதியின் குடும்பத்தில் பிறந்தது பெருமை, வரம் என்றே சொல்லாம் என உற்சாகத்துடன் கூறுகிறார் பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி.
பாரதியின் மரபு, பெருமை எனப் பலவற்றையும் குறித்து தமிழ் முரசுடனான சிறப்பு நேர்காணலில் நிரஞ்சன் பகிர்ந்துகொண்டார்.
சிறு வயதில் தமது சந்ததியின் பெருமை குறித்த பெரும்புரிதல் இல்லாவிட்டாலும், தற்போது ஓர் எழுத்தாளராக, பாடலாசிரியராக, இணையவழித் தமிழாசிரியராகப் பணியாற்றும் இவர், பாரதி கொடுத்த தமிழ்க்கொடைதான் தமக்கு வாழ்வைக் கொடுத்ததாகப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
“பாரதியாரின் பெருமைகளை அனைவரிடமும் கொண்டுசெல்வது எனது கடமை,” என்ற அவர், அதன் ஒரு பகுதியாக பாரதியாரின் கவிதைகளுக்கு உரையெழுதியதுடன், “பாரதி கான்ஷியஸ்னெஸ்’ எனும் யூடியூப் பக்கத்தை நடத்திவருகிறார்.
“அவரது பெருமையைச் சுமப்பதுடன் எனக்கான சிறு மரபையும் பெருமையையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அழுத்தமும் உள்ளது,” என்கிறார் இவர்.
பாரதியின் பேத்தியும் தம் பாட்டியுமான லலிதா பாரதி சிறு வயதிலேயே தேசப்பற்றுப் பாடல்களைக் கற்றுக்கொடுத்ததாகக் கூறிய அவர், அண்மையில் அவரது தேசிய கீதங்களுக்குத் தாம் உரை எழுதியபோதுதான் அவரது புலமை குறித்தும் ஆளுமை குறித்தும் ஆழமாக அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
பாரதியின் சிந்தனை வீச்சு
“பாரதி ஒரு புரட்சியாளர். ஏனெனில், புரட்சி எனும் சொல்லை உருவாக்கியதே அவர்தான்,” எனச் சிரிப்புடன் அவரது ஆளுமை குறித்துப் பகிர்ந்துகொண்டார் நிரஞ்சன்.
மொழியுடன், இலக்கியம், இதழியல், தேசியம், ஆன்மிகம் என அவர் தொடாத துறைகளே இல்லை எனக் குறிப்பிட்ட நிரஞ்சன், அவரது கவிதைகளுக்கு இணையாகக் கட்டுரைகளும் ஆழம் மிகுந்தவை என்றும் அவற்றை யாரும் அதிகம் படிப்பதில்லை என்றும் சொன்னார்.
“தொலைநோக்குச் சிந்தனையுடன் கவி படைத்தவர் பாரதி. 1909ஆம் ஆண்டு ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ எனப் பாடியவர். தன்னிலை மீறிய உணர்வின் வெளிப்பாடு அது. ரஷ்யப் புரட்சி பற்றிப் பேசிய முதற்கவியும் அவரே.
“அவர் மொழி, சமூக மாற்றத்தை மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அவதரித்திருக்கலாம்; கவி உணர்வு மிகுந்த ஒருவகைப் பித்து நிலையில் எதிர்காலத்தை உணர்த்தும் பாடல்களை இயற்றியிருக்கலாம்,” என்றார்.
அவர் வெறும் 38 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் 138 ஆண்டுகள் வாழ்ந்து சாதிக்க வேண்டியவற்றைச் செய்துள்ளதாகவும் கூறினார் நிரஞ்சன்.
20ஆம் நூற்றாண்டின் மொழி, தேசிய அரசியலை பாரதியைத் தவிர்த்துப் பேசவே முடியாது என்று சொன்ன அவர், “அவர் ஓர் ஆச்சரியம்” என்றும் குறிப்பிட்டார்.
‘சக்திதாசன்’
சிங்கப்பூரிலிருந்து வந்து எடுக்கப்பட்ட பாரதி குறித்த ஆவண நாடகத்தின் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட அவர், “பாரதி, தமிழின் அடையாளம் என்பதைத் தாண்டி அவரது ஆன்மிகப் பயணத்தைப் பேசியுள்ளது. அதில் பங்களித்தது பெருமை,” என்றார்.
அவர் இந்து சமயத்தின் சாக்த மார்க்கத்தைப் பின்பற்றியவர் என்று கூறிய நிரஞ்சன், இந்த ஆவணப் படம் அவருக்கு ‘பாரதி’ எனும் பட்டம் வாங்கிக் கொடுத்த எட்டயபுர அரண்மனை, திருநெல்வேலியில் அவரது பள்ளி, புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீடு என இதுவரை காணொளிகளில் காட்டப்படாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
பாரதி ஓர் அவதாரம்: ராஜ்குமார் பாரதி
பாரதியின்மீது மக்களுக்குள்ள அன்பு அளப்பரியது என்றும் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கும்போது அவரையே பார்ப்பதாக எண்ணி மகிழ்ச்சிகொள்வதை உணர முடிகிறது என்றும் சொல்கிறார் பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி.
பிரபல கர்நாடக இசைக் கலைஞரான அவர், பாரதியாரின் நினைவு நாளையொட்டி, அவரது பாடல்களின் தனித்துவம், அவரது ஞானம், இசையறிவு, பன்மொழித்திறன், ஆன்மிக உணர்வு, மாறுபட்ட சிந்தனை எனப் பலவற்றைக் குறித்தும் தமிழ் முரசுடனான சிறப்பு நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
“மகாகவி பாரதியின் பெருமைகளைத் தாங்குவது எனக்கும் எங்கள் சந்ததியினருக்கும் சுகமான சுமைதான்,” எனப் புன்னகையுடன் பேசத் தொடங்கிய அவர், “பாரதி ஓர் அவதாரம். அதனை அவரே உணர்ந்திருந்ததாகவே நான் கருதுகிறேன்,” எனக்கூறி ‘பூமிக்கெனையனுப்பினான்’, ‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்’ என அவர் எழுதிய சில வரிகளையும் சுட்டிக்காட்டினார்.
“அவர் ஒரு அத்வைதி. சமூகம் குறித்தும், உலகம் குறித்தும் தெளிவான பார்வை கொண்டிருந்தார்,’ என்று குறிப்பிட்டார் ராஜ்குமார். உலகின் பல்வேறு தத்துவங்களும் போதிக்கும் ‘அன்பு’ குறித்து கிடைத்த இடத்திலெல்லாம் எழுதித் தீர்த்திருப்பதாகவும் சொன்னார்.
‘அன்பினைக் கைக்கொள் என்பான்’, ‘உலகத்துயர் யாவையும் அன்பினிற் போகும்’, ‘அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’, ‘உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!’ என அவரது வரிகள் பலவற்றையும் ராஜ்குமார் சுட்டிக்காட்டினார்.
பாரதியின் புகழ் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து ஒலிக்கும் என்பது அவரது உறுதியான நம்பிக்கை.