தெருநாய்களின் நிலை: இருவேறு நிலைப்பாட்டில் பிடாடாரிவாசிகள்

2 mins read
12205864-fd86-41bf-ac5f-57723569521d
தெருநாய்கள் சுற்றித் திரிவது குறித்து நடையர்களை எச்சரிக்கும் அறிவிப்புப் பலகை ஒன்று பிடாடாரி பார்க் டிரைவில் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடாடாரி பூங்காவில் சுற்றித் திரியும் நான்கு தெருநாய்களின் கதி குறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அப்பகுதியிலிருந்து அந்த நாய்களை தான் வெளியேற்றப் போவதாக தேசிய பூங்காக் கழகம் கூறியிருந்தது.

2024 செப்டம்பரில் பிடாடாரி பூங்கா திறக்கப்பட்டதிலிருந்து அந்த நாய்கள் சுற்றித் திரிவது குறித்து ஏறக்குறைய 50 பேர் புகார் அளித்துள்ளனர். இதனால் பூங்காக் கழகம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக அதன் பேச்சாளர் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) கூறினார்.

அந்த நாய்களை ‘மனிதாபிமானத்துடன் பிடிக்கும்’ பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த பூங்காக் கழகம், பிடிபட்டவுடன் அவற்றைக் ‘கையாள’ விலங்குநலக் குழுக்களுடன் சேர்ந்து தான் செயல்படவுள்ளதாகக் கூறியது.

ஆனால், இந்நடவடிக்கை குறித்து குடியிருப்பாளர்கள் இருமனத்துடன் உள்ளனர். அந்த நாய்கள் பூங்காவிலேயே விட்டுவைக்கப்பட சிலர் முறையிட்டுள்ளனர். அவற்றைக் காப்பாற்றக் கோரி இணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, 3,000க்கும் மேற்பட்ட கையொப்பங்களைப் பெற்றுள்ளது.

வேறு சிலர், அந்த நாய்கள் பூங்காவிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அந்தப் ‘பெரிய நாய்கள்’ அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் அவை ‘பயங்கரமாக’ குறைப்பதுடன், மக்களைத் துரத்துவதாகவும் அவர்கள் கூறினர்.

எட்டுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவையாக நம்பப்படும் அந்த நாய்கள், ஏறக்குறைய 13 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அப்பூங்கா ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. அந்தப் பகுதியையும் நடைபாதையையும் பிரிக்கும் விதமாக அவற்றுக்கிடையே ஆரஞ்சு நிற வலை போடப்பட்டிருக்கிறது.

ஜனவரி இறுதியில், காட்டுப்பகுதிக்கும் நடைபாதைக்கும் இடையே மேலும் தடுப்பு போடும் விதமாக, நீல நிற விரிப்பைப் பூங்காக் கழகம் எழுப்பியது.

இதுவரை அந்த நாய்கள் எவரையும் கடித்ததில்லை என்று இருதரப்பு குடியிருப்பாளர்களும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்