பிரச்சினைகள் உள்ளிருந்தே வருகின்றன: மக்கள் சக்திக் கட்சி

பிரச்சினைகள் உள்ளிருந்தே வருகின்றன: மக்கள் சக்திக் கட்சி

2 mins read
3df001de-08a1-4e55-a717-87b75babf0a0
தெம்பனிஸ் வட்டாரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெரும் பிரச்சினைகள் வெளியிலிருந்து வருபவையல்ல, உள்ளிருந்து வருபவை என்றும் தவறான கொள்கைகளிலிருந்து வருபவை என்றும் மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி வேட்பாளருமான கோ மெங் செங் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் சிலரை இழந்தால் அரசாங்கம் வலுவிழக்கும் என்று மசெக பிரசாரம் செய்வதைக் குறிப்பிட்ட திரு கோ, குழுத்தொகுதி முறையை மசெக அரசாங்கம்தான் பின்பற்றுகிறது என்றார்.

தெம்பனிஸ் வட்டாரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் கடைசிப் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தொடர்ந்து அவரும் அவரது கட்சி வேட்பாளர்களும் வலுவற்ற சுகாதாரக் கொள்கைகள் குறித்துப் பேசினர்.

பிரச்சினைகளை மட்டும் பேசாமல், அவற்றுக்குரிய கொள்கைப் பரிந்துரைகளையும் தங்கள் கட்சி வழங்கியுள்ளதாகக் கூறினார் அக்கட்சியின் அங் மோ கியோ குழுத்தொகுதி வேட்பாளர் தாடியஸ் தாமஸ்.

மருத்துவமனை வசதிகளை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரிப்பது, சிங்கப்பூரர்களின் வேலையைப் பாதிக்காத தடையற்ற வர்த்தக உடன்பாடுகள், சிங்கப்பூரர்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு உள்ளூரில் குழந்தை பிறப்பதை ஆதரிப்பது, குடியுரிமை பெறுமுன் குறைந்தது 12 ஆண்டுகள் இங்கு வசித்ததை உறுதிசெய்வது ஆகிய பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.

கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிட்ட சில சட்டங்களில் ஏன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என அக்கட்சியின் தலைவரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி வேட்பாளருமான திரு டெரிக் சிம் கேள்வியெழுப்பினார்

மசெகவின் கொள்கைகளால் மக்கள் வெறும் எண்களாகக் கருதப்படுவதுபோலத் தோன்றுகிறது என்று சொன்ன தெம்பனிஸ் குழுத்தொகுதி வேட்பாளர் வியர் நேதன், “சிங்கப்பூர்ப் பொருளியல் அடிப்படையில் மட்டுமன்றி மனநிறைவு, அர்த்தமிகு வாழ்க்கை ஆகியவற்றால் அளவிடப்பட வேண்டும்,” என்றார்.

அச்சம் தொனிக்கும் அரசியல் இல்லாமல், அன்பு தொனிக்கும் அரசியல் வேண்டும் என்றார் திரு நேதன்.

கடந்த காலத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தை அமரர் லீ குவான் யூ இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை நினைவுகூர்ந்த அங் மோ கியோ குழுத்தொகுதி வேட்பாளர் மார்ட்டின் ஹோ, தவறு நடக்கும்போது அதனை எதிர்க்க மனவுறுதி வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்