விமான நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய எரிபொருளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கும் மசோதா செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், சிங்கப்பூரிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் நிலையான வரியை அரசாங்கம் விதிக்கலாம்.
பெரும்பாலும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்ற கழிவுப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் பசுமையான விமான எரிபொருள், விமானத் துறை வெளியேற்றும் கரிமத்தைக் குறைப்பதற்கான நடைமுறை வழி என்று கருதப்படுகிறது.
ஏனெனில், விமானங்களின் எரிபொருள் நிரப்பும் உள்கட்டமைப்பில் எந்தவொரு மாற்றங்களும் செய்யாமல் இந்த நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய எரிபொருளைப் பயன்படுத்தலாம்.
மேலும், தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருளுடன் இது ஒன்றிணைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது.
சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் திருத்தப்பட்ட மசோதாவை விவாதத்திற்கு முன்வைத்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் பசுமை எரிபொருளுக்கான வரியை ஆணையத்திற்குச் செலுத்த அனுமதிக்கும் எனக் கூறினார்.
மேலும், அத்தகைய எரிபொருளைக் கொள்முதல் செய்து, அவற்றை நிர்வகிக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் அவற்றை வாங்குவதற்குத் தேவையான நிதியைச் சிங்கப்பூர் முன்கூட்டியே வரி மூலம் வசூலிக்கும் என்றும் அவர் கூறினார்.
பசுமை எரிபொருளுக்கான வரி விமானப் பயணிகளுக்குக் கூடுதல் வரியாக விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வரி விதிப்பின் தாக்கம் குறித்தும் விமானப் பயணச் சீட்டுகளின் விலையைக் கூடுதல் வரி மூலம் உயர்த்துவதால் பயணிகளின்மீது செலவுகளைச் சுமத்துவதற்கான காரணங்கள் குறித்தும் செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி போ லி சான், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஷரேல் தாஹா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, பசுமை எரிபொருளுக்கான வரியை விமான நிறுவனங்களுக்குப் பதிலாகப் பயணிகள் ஏன் செலுத்த வேண்டும் எனத் திருவாட்டி போ கேட்டார்.
இதற்குப் பதிலளித்து பேசிய திருவாட்டி சுன், நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய விமான எரிபொருளுக்கான வரியை விமான நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் செலுத்துவர் என்றார்.
விமானப் போக்குவரத்து சேவையின் இறுதி பயனரின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது என்றும் வரியைப் பயணிகள் அல்லது அதன் சேவையைப் பெறுபவர்கள்மீது சுமத்த விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் மூத்த துணை அமைச்சர் சுன் கூறினார்.