அரசாங்க அமைப்புகள் குடிமக்களின் தரவைப் பொதுத்துறைக்கு வெளியே உள்ள பங்காளிகளுடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் மசோதா திங்கட்கிழமை (ஜனவரி 12) அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது சமூக சேவைகளை மிகவும் திறம்பட வழங்குவதற்கு வழி வகுத்தது.
பொதுத்துறை (ஆளுமை) சட்டத் திருத்த மசோதா, சமூக சேவை அமைப்புகள், சமூக பங்காளிகள், சுய உதவிக்குழுக்கள் போன்றவற்றுடன் தரவு பகிர்வு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. ஏனெனில் இந்த வெளிப்புறப் பங்காளிகள் தற்போதைய பொதுத்துறை (ஆளுமை) சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
2018ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுத்துறை (ஆளுமை) சட்டம், பொதுத்துறை அமைப்புகளுக்கு மட்டுமே தரவு பாதுகாப்பு மற்றும் பகிர்வு தேவைகளை வகுக்கிறது.
எனவே பல ஆண்டுகளாக, சமூக சேவை அமைப்புகள், சமூகப் பங்காளிகள் மற்றும் சுயஉதவி குழுக்கள் குடிமக்களின் தரவைப் பெறுவதற்குத் தனிப்பட்ட ஒப்புதல், பொது நலன் சார்ந்த காரணங்களைக் கொண்ட பொதுவான சட்டம் அல்லது துறை சார்ந்த சட்டங்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.
திங்கட்கிழமை (ஜனவரி 12) அன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ், “பல உண்மையான உலக சூழ்நிலைகளில் இந்த வழிகள் சிறந்தவை அல்ல,” என்றார்.
“உதாரணமாக, அரசாங்கத்தால் அந்தத் தகவலை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாவிட்டால், வெளிப்புறப் பங்காளிகள் யாருக்கு உதவுவது என்பதை அடையாளம் காண முடியாது. பெறுநர்களின் தரவு பகிரப்படுவதற்கு முன்பு அவர்களின் ஒப்புதலைப் பெறுவதும் ஒரு சவாலாகும். ஏனெனில் தொடர்பு விவரங்கள் காலாவதியாகி இருக்கலாம். அவசர அல்லது பெரிய அளவிலான சூழ்நிலைகளில், ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒப்புதல் கோருவதால் ஏற்படும் தாமதங்களை அரசாங்கத்தால் ஏற்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
பொது நலனை நிலைநாட்டுவதும் கடினம் என்று திருவாட்டி லாவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வேலைவாய்ப்பு உதவி மற்றும் பயிற்சி வாய்ப்புகள் போன்ற உதவி தேவைப்படும் நபர்களைச் சரியாக அடையாளம் காண, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பான எஸ்ஜி எனேபல் மற்றும் பிற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
ஆனால் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, அவர்களின் தரவைப் பகிர்வதற்கான சட்ட அடிப்படையை நிறுவுவது சவாலானது என்று கண்டறிந்தது. இதன் விளைவாக, சமூக சேவை அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளின் முகவரிகளை மட்டுமே பெற முடிந்தது. மாற்றுத்திறனாளிகளின் நிலைமைகள், தேவைகள் அல்லது மக்கள்தொகை பற்றிய வேறு எந்த தகவலையும் பெற முடியவில்லை.
வெளித் தரப்பினருடன் பகிரப்படும் தரவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பகிரப்படும் தரவைக் கையாள வெளிப்புற தரப்பினர் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்தும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.
திருத்தப்பட்ட பொதுத்துறை (ஆளுமை) சட்டத் திருத்தத்தின் கீழ், பொதுத்துறை அமைப்புகள் ஏழு குறிப்பிட்ட பொது நோக்கங்களின் கீழ் வெளித் தரப்பினருடன் மட்டுமே தரவைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று திருவாட்டி லாவ் விளக்கினார்.

