தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்வந்தர் ஓங் பெங் செங்கிற்கு $30,000 அபராதம்

2 mins read
cdaa779b-1e54-455a-b757-087573a830a8
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தொடர்பிலான வழக்கில் நீதிக்குத் தடையாக இருக்க துணைபுரிந்த குற்றத்தை ஓங் பெங் செங் ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் வழக்கில் தொடர்புடைய செல்வந்தர் ஓங் பெங் செங்கிற்கு நீதிக்குத் தடையாக இருக்க துணைபுரிந்ததற்காக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) $30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்ட 79 வயது ஓங்கிற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது.

ஓங்கின் உடல்நலக் குறைவு காரணமாக கருணை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்று அரசுத்தரப்பு, தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர்கள் சொன்னதை முதன்மை நீதிபதி லீ லிட் செங் ஒப்புக்கொண்டார்.

“நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தெளிவான மருத்துவ சான்றுகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர் மைலோமா எனும் ஒருவித குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

“அவருக்குச் சிறைத் தண்டனை விதிப்பது அவரின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம்,” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ஒருவேளை ஓங்கின் உடல்நலம் சீராக இருந்திருந்தால் தகுந்த தண்டனையாக மூன்று மாதச் சிறை விதிக்கப்பட்டிருக்கும் என்றார் நீதிபதி லீ.

ஓங் பெங் செங் 79, மைலோமா என்ற ஒரு வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் சான்று சமர்ப்பிக்கப்பட்டன.
ஓங் பெங் செங் 79, மைலோமா என்ற ஒரு வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் சான்று சமர்ப்பிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசுத்தரப்பும் இதற்கு முன் ஓங்கிற்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்படி வாதிட்டது.

ஆனால் ஓங்கின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அபராதம் விதிக்கப்பட்டதை அவர்கள் எதிர்த்து வாதிடவில்லை.

ஓங், 2020ஆம் ஆண்டு பலவகை மைலோமா நோயால் பாதிக்கப்பட்டதை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

ஓங்கின் விசாரணை அரை மணி நேரத்துக்குள் முடிந்தது.

அதையடுத்து ஓங் காசோலை ஒன்றில் கையெழுத்திடுவது போல தெரிந்தது.

2022 டிசம்பர் மாதம், அப்போது அமைச்சராக இருந்த திரு ஈஸ்வரனை தம்முடன் கத்தாருக்குப் பயணம் செய்யும்படி ஓங் கேட்டார்.

திரு ஈஸ்வரன் ஓங்கின் விருந்தினராக இருப்பார் என்றும் அவர்கள் தனிப்பட்ட விமானத்தில் பயணம் செய்வர் என்றும் ஓங் சொன்னார்.

அதோடு திரு ஈஸ்வரனுக்கான தங்குமிடம் போன்ற அனைத்து செலவுகளையும் ஓங் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார்.

திரு ஈஸ்வரன் அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஓங்கின் தனியார் விமானத்தில் திரு ஈஸ்வரன் கத்தார் சென்றார்.

அவரின் பயண மதிப்பு கிட்டத்தட்ட $10,410 என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

திரு ஈஸ்வரன் அங்கு ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கினார்.

ஓரிரவு அங்குத் தங்க கிட்டத்தட்ட $4,737 செலவாகும்.

இத்தகைய செலவுகளைத் திரு ஈஸ்வரன் மூடிமறைக்க உடந்தையாக இருந்த குற்றத்தை ஓங் எதிர்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்