சிங்கப்பூரில் பறவை மரணம் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
பறவைகள் காயமுறுவது மரணமடைவதும் தொடர்பாகச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் ஒரே இயற்கை வரலாற்று அரும்பொருளகம் அதுதான். அங்கு 2025ஆம் ஆண்டில் ஏறத்தாழ 650 சம்பவங்கள் பதிவானதே இதுவரை பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையில் உச்சம்.
கட்டடங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின்மீது மோதியே அதிகப் பறவைகள் உயிரிழக்கின்றன. அதுவே பறவை மரணங்களுக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அரும்பொருளகத்தில், இறந்த பறவைகளுக்கான உதவித் தொலைபேசி நிலையம் செயல்படுகிறது. அதனையும் பறவை மீட்பு நடவடிக்கையையும் பறவை விஞ்ஞானி டான் யென் யி என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்த ஆண்டும் பறவை இறப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவதாக அவர் குறிப்பிடுகிறார். 2025ஆம் ஆண்டைவிட இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் பறவை மரணப் போக்கு அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டின் சம்பவங்களை முறியடிப்பதுபோலத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பறவை மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, புகார்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறை தொடர்பாகப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கூடுதல் விழிப்புணர்வும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார் டாக்டர் டான்.
கடந்த ஆண்டு (2025), கட்டடங்கள், சன்னல்கள் போன்றவற்றில் மோதி ஏறக்குறைய 650 பறவைகள் மாண்டதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது ஐந்து மடங்கு அதிகம்.
கட்டடங்கள்மீது நேரடியாக மோதும் பறவைகள் மூர்ச்சையடைவதுடன் காயமடைகின்றன. ஒருசில பறவைகளின் நாசியிலிருந்து ரத்தம் கசிவதால் அத்தகைய விபத்துகளில் அவை இறந்துவிடுகின்றன.

