தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரும்புகளால் உருவான கோலம்; நன்கொடையாகத் தரப்பட்ட பாகங்கள்

2 mins read
f56ab0f7-a68f-4ebb-b83a-3ccc3cccc9da
கரும்பால் உருவாக்கப்பட்ட கோலம். - படம்: விஜயா மோகன்

பீஷான் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் பீஷான் ஸ்கை வசிப்போர் கட்டமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் கொண்டாட்டத்தின்போது கரும்புகளால் கோலம் அமைத்து சாதனை படைக்கப்பட்டது.

பிப்ரவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தக் கொண்டாட்டத்தில் 300க்கும் அதிகமான அவ்வட்டாரவாசிகள் பங்கேற்றனர்.

பல்லாங்குழி ஆட்டம், ஹாப்ஸ்காட்ஸ் போன்றவற்றுடன் உறியடி விளையாட்டும் நடத்தப்பட்டது. அத்துடன், அகல் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டியிலும் பங்கேற்பாளர்கள் ஒருகை பார்த்தனர்.

நாவுக்குச் சுடச்சுட வடை, தொண்டைக்கு இதமூட்டிய தித்திப்புக் கரும்புச்சாறு போன்றவற்றை வாங்கிச் சுவைக்க முடிந்தது. மயிலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரியக் கலைகள், கிராமிய உணர்வைக் கொண்டுவந்தன.

இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஆகச் சிறப்புமிக்க அம்சம், கரும்பால் ஆன சிங்கப்பூரின் ஆகப்பெரும் கோலம் வடிவமைக்கப்பட்டதுதான். ஒன்பது மீட்டர் நீளமும் எட்டு மீட்டர் அகலமும் கொண்ட அக்கோலத்தை அமைக்க 30க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் கைகோத்தனர். அவர்கள் 7 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

பீஷான்-தோ பாயோ அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். பீஷான் ஸ்கை வசிப்போர் கட்டமைப்புக்கும் இந்தியர் நற்பணிச் செயற்குழுவிற்கும் இடையிலான பங்காளித்துவத்தால் உருவான நிகழ்ச்சி பெரும் பாராட்டைப் பெற்றது.

கரும்புக் கோலத்தை வடிவமைத்து அதன் உருவாக்கத்தை வழிநடத்திய திருவாட்டி விஜயா மோகன், சூரியனைக் குறிப்பிடும் விதமாக மஞ்சள், ஆரஞ்சு நிற பூக்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

“பயனுள்ள பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அத்துடன், கோலமிட்ட பிறகும் பயன்படுத்த முடிந்த பொருள்களைப் பயன்படுத்தினேன்,” என்றார் திருவாட்டி விஜயா. கோலம் கலைக்கப்பட்ட பின்னர், அதிலிருந்த கரும்புத்துண்டுகள் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தரப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகாலத் தொண்டூழிய அனுபவம் கொண்டுள்ள ஆர்.கவிதா, கரும்புக் கோலம் போன்ற புதுமையான முயற்சிளின்வழி இளையர்களை ஈர்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “எல்லா வயதுப் பிரிவினரும் பங்கேற்றதன் மூலம் குழு உணர்வும் ஒருவித முனைப்பும் உருவானது. வழக்கமான எல்லைகளைத் தாண்டி செயல்படுவதற்கு இந்த அனுபவம் கைகொடுத்தது,” என்று அவர் கூறினார்.

“சாதனையை முறியடிப்பது மட்டும் நோக்கமன்று, மக்களைப் பிணைத்து வலுவான, துடிப்புமிக்க சமூகத்தை உருவாக்குவதும் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமாக இருந்தது,” என்று பீஷான் ஸ்கை வசிப்போர் கட்டமைப்பின் தலைவர் விஷ்ணு ஹரிதாஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்