பீஷானில் அறிவிக்கப்பட்ட புதிய உணவங்காடி நிலையம், பலதுறை மருந்தகம் ஆகியவற்றுக்கான பணிகளும் பேருந்து முனையப் புதுப்பிப்புப் பணிகளும் அரசாங்கத்தின் இந்தத் தவணைக் காலத்தில் தொடங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
அந்தப் பணிகள் நிறைவடையச் சில ஆண்டுகள் ஆகும் என்றார் அவர்.
பீஷான் நகர மையத்தில் ஏறத்தாழ 200,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய அலுவலகக் கட்டடம் அமைக்கப்படக்கூடும் என்று திரு சீ, வியாழக்கிழமை (ஜூன் 26) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டடம் பாயா லேபார் சென்ட்ரலில் அமைந்துள்ள அலுவலகக் கட்டடத்துக்கு ஈடான பரப்பளவைக் கொண்டிருக்கும்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2025 பெருந்திட்ட நகலறிக்கையின்கீழ் பீஷானைப் புதிய வர்த்தக நடுவமாக மேம்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்கிறது.
அந்தத் திட்டம் குறித்த தகவல் ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அரசாங்க அமைப்புகள் சில, பீஷான் வட்டாரத்துக்கு அலுவலகங்களை மாற்றிக்கொள்ளும் சாத்தியம் குறித்து ஆய்வுசெய்வதாக ஆணையம் தெரிவித்திருந்தது.
பீஷானைத் துணை வட்டார நிலையமாக மேம்படுத்தத் திட்டமிடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பாய லேபார், சிராங்கூன் வட்டாரங்களில் இருப்பதைப் போன்று வர்த்தக நடுவங்கள் அங்கு அமைக்கப்படும். குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு அருகில் வேலையிடங்கள் அமைய அது வழிவகுக்கும்.
பீஷான் வட்டாரத் தொடர்பை மேம்படுத்தும் முயற்சி குடியிருப்பாளர்கள் அந்த நகர்ப்புறத்தில் எளிதாக நடமாடவும் அக்கம்பக்க வசதிகளை எளிதில் அணுகவும் உதவும் என்றார் அமைச்சர் சீ.
எடுத்துக்காட்டாக, அந்த வட்டாரச் சைக்கிளோட்டப் பாதைகள் மூலம் வடக்கு-தெற்குப் பாதையிலும் காலாங் ஆற்றுப் பகுதியிலும் புதிதாக அமையவிருக்கும் பொழுதுபோக்கு வசதிகளுக்குக் குடியிருப்பாளர்கள் சைக்கிளில் செல்ல முடியும் என்பதை அவர் சுட்டினார்.
புதிய பெருந்திட்ட நகலறிக்கையை விளக்கும் கண்காட்சி, தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக நடுவத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இடம்பெறும் எனக் கூறப்பட்டது.