மக்கள் செயல் கட்சித் தலைவர் டெஸ்மண்ட் லீ கருத்து

மசெகவின் அணுகுமுறை, பிரதமரின் பாணி தேர்தல் வெற்றிக்குக் காரணம்

2 mins read
2788e819-5c45-4e0f-8dbf-9f3cca685330
மக்கள் செயல் கட்சி வாக்காளர்களுக்கு ஏற்ற ஆறுதலான தொனியில் பிரசாரம் செய்தது பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு ஒரு காரணம் என்றார் கட்சித் தலைவர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் செயல் கட்சி வாக்காளர்களுக்கு ஏற்ற ஆறுதலான தொனியில் பிரசாரம் செய்தது, மே மாத பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு ஒரு காரணம் என்றார் கட்சித் தலைவர் டெஸ்மண்ட் லீ.

நிச்சயமற்ற சூழலில் நிலையான அரசாங்கத்தை மக்கள் விரும்பினர் என்றும் பிரதமராகத் திரு லாரன்ஸ் வோங் போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையை வென்றார் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்றும் உறுதியான, நிலையான அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.

“உலக அளவிலான புவிசார் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில் அது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் குறைவாக எடைபோட்டுவிடக்கூடாது,” என்று திரு லீ சொன்னார்.

2020ஆம் ஆண்டு 61.24 விழுக்காட்டு வாக்குகளை வென்ற மக்கள் செயல் கட்சி இவ்வாண்டு 65.57 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

புதிய பிரதமரின்கீழ் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இதற்குமுன் வாக்கு எண்ணிக்கையில் காணப்பட்ட வழக்கமான சரிவு இந்த முறை இல்லை.

பிரதமர் வோங்கின் ஆளுமைக்கும் அவரது அணியின் வெளிப்படையான நிர்வாகத்துக்கும் அந்த வாக்குகள் ஒரு சான்று என்றார் திரு லீ.

வெவ்வேறு வயதினருக்கு இடையிலும் மக்கள் செயல் கட்சி ஆதரவைச் சம்பாதித்துள்ளது என்பதைத் திரு லீ பகிர்ந்துகொண்டார்.

கொள்கை ஆய்வுக் கழகம் தேர்தல் முடிவுகள் தொடர்பில் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் மக்கள் செயல் கட்சி, வயது, பாலினம், வீட்டு வகை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தது 60 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

21 வயதிலிருந்து 39 வயது வரையிலானவர்களில் பத்தில் ஆறு பேர் மக்கள் செயல் கட்சியைத் தெரிவுசெய்ததாக திரு லீ சுட்டினார். இளையர்கள் அதிகம் எதிர்க்கட்சிகளுக்கே வாக்களித்தனர் என்ற எண்ணத்துக்கு அது நேர்மாறாக இருக்கிறது என்றார் அவர்.

மக்கள் செயல் கட்சி தெளிவான அதிகாரத்துக்கு என்று நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், கட்சி ஒருபோதும் அதை மெத்தனமாகக் கருதிவிடாது என்றார்.

சிங்கப்பூரர்களுக்கு இன்னும் சிறப்பாகச் சேவை செய்யவும் ஆதரவளிக்கவும் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று திரு டெஸ்மண்ட் லீ உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்