அதிக விஷமுள்ள நாகப்பாம்பு ஒன்று தென்பட்டதை அடுத்து, சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியைக் கண்காணித்து வருவதாகத் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
மெய் ஹுவான் டிரைவ் பகுதிக்கு அருகில், அறிவியல் ரீதியாக ‘நாஜா சுமத்ரானா’ என்று அழைக்கப்படும் கருநாகம் காணப்பட்டது குறித்து கழகத்திற்குத் தகவல் கிடைத்ததாக, ஊடகங்களின் கேள்விகளுக்குப் புதன்கிழமை (செப்டம்பர் 23) பதிலளித்தபோது கழகத்தின் வனவிலங்கு மேலாண்மைக் குழும இயக்குநர் ஹாவ் சூன் பெங் கூறினார்.
“ஒவ்வொரு முறையும் பாம்பு தென்படுவதாகத் தகவல் வரும்போது, அப்பகுதிக்குச் சென்று பாம்பைக் கண்டுபிடிக்க ஒப்பந்ததாரர்கள் உடனடியாகப் பணியில் அமர்த்தப்படுவர்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அந்தத் தருணங்களில் பாம்பு கண்டுபிடிக்கப்படவில்லை.
“பூங்காக் கழகம் தொடர்ந்து அந்தப் பகுதியைக் கண்காணித்து, தென்படும் நாகப்பாம்புகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்,” என்றும் அவர் கூறினார்.
கருநாகங்கள் சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவை. எலிகள் போன்ற இரைகள் கிடைக்கக்கூடிய பூங்காக்கள், தோட்டங்கள், நகர்ப்புற இடங்கள் ஆகியவற்றில் அவை காணப்படுகின்றன.
இவ்வாண்டு, கருநாகங்கள் தென்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவுசெய்துள்ளனர். பாசிர் ரிஸ் பூங்கா, கெண்ட் ரிட்ஜ் பூங்கா, சீனத் தோட்டம் போன்ற இடங்களில் அந்தப் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பல்வேறு வனவிலங்குப் புகைப்படக்காரர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாம்பைக் கண்டால் அதை நெருங்கவோ கையாள முயற்சி செய்யவோ கூடாது என்று திரு ஹாவ் எச்சரித்தார்.
