விருந்து நிகழ்ச்சியில் கறுப்பு முக ஒப்பனை: மன்னிப்புக் கோரியது யுஓஎல் குழுமம்

விருந்து நிகழ்ச்சியில் கறுப்பு முக ஒப்பனை: மன்னிப்புக் கோரியது யுஓஎல் குழுமம்

2 mins read
4c224696-72e9-46e8-8d40-f4729c6f511f
சம்பவம் தொடர்பில் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக யுஓஎல் பேச்சாளர் கூறினார். - கோப்புப் படம்: சாவ்பாவ்

உள்ளூர்ச் சொத்துச் சந்தைக் குழுமமான யுஓஎல், அண்மையில் அது நடத்திய விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் நடவடிக்கை தொடர்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

விருந்தில் கலந்துகொண்டவர்களில் எட்டுப் பேர், கறுப்பு முக ஒப்பனை, ஆப்பிரிக்கர்களைப்போல் தோற்றமளிக்கும் போலியான சிகை அலங்காரத்துடன் காணப்பட்டனர்.

விருந்து நிகழ்ச்சியின் அலங்காரப் பதாகைக்கு முன்னர் நின்றபடி எடுத்துக்கொண்ட படத்தை நவம்பர் 24ஆம் தேதி டிக்டாக் தளத்தில் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

நவம்பர் 25ஆம் தேதி மாலை 6.30 மணி நிலவரப்படி அது 25,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்தது. பின்னர் அந்தப் படம் எக்ஸ் தளத்திலும் பதிவேற்றப்பட்டது.

எக்ஸ் தளத்தில் வெளியான மற்றொரு படத்தில் அந்த எட்டுப் பேரும் மேடையில் நிற்பதைக் காணமுடிகிறது. நிகழ்ச்சியின் பெயர் யுஓஎல் அண்ட் பிபிஎச்ஜி வருடாந்தர விருந்து, நடன நிகழ்ச்சி 2024 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிஎச்ஜி என்பது பான் பசிபிக் ஹோட்டல் குழுமத்தைக் குறிக்கிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த யுஓஎல் குழுமப் பேச்சாளர், இச்சம்பவம் குறித்துத் தங்கள் நிறுவனம் அறிந்திருப்பதாகக் கூறினார்.

“குற்றம் ஏதும் நிகழ்ந்திருந்தால் அதுகுறித்து உளமார மன்னிப்புக் கோருகிறோம்,” என்றார் அவர். படத்தில் காணப்படுவோர் யுஓஎல் ஊழியர்களா என்ற கேள்விக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

இணையவாசிகள் பலரும் விருந்தினர்களின் கறுப்பு முக ஒப்பனையைக் குறைகூறினர். அவர்கள் இதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

விருந்து நிகழ்ச்சி நவம்பர் 14ஆம் தேதி நடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

குறிப்புச் சொற்கள்