கார் நிறுவனங்கள் மீதான கள்ளப்பண விசாரணை விரிவடைகிறது

2 mins read
3218c576-8e3c-4a90-bac6-f463e128c07e
சிங்கப்பூரில் வாகனங்களை வாடகைக்கு விடும் எஸ்ஆர்எஸ் ஆட்டோ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் டான் இயூ கியட் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கள்ளப்பண விசாரணையில் தொடர்புடைய எஸ்ஆர்எஸ் ஆட்டோ கார் வாடகை மற்றும் கடன் வழங்கும் நிறுவனம் தமது வாகனங்களை விற்பனை செய்யவோ, உரிமையாளர் மாற்றங்களை மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களுக்கு 121 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் குறித்து பல அரசாங்க அமைப்புகள் விசாரணை நடத்திவருகின்றன.

அண்மையில் அந்த நிறுவனத்தின் 49 வயது உரிமையாளரான டான் இயூ கியட் கைது செய்யப்பட்டார். காவல்துறைக்கு, சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைக்கான புகார் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்ட பிறகு, கள்ளப்பணம் தொடர்பான விசாரணை கடந்த 2024ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது கம்போடிய வர்த்தகர் சென் சீ, அவருடன் தொடர்புடையோர்மீது காவல்துறை விசாரணை வலையை வீசியது.

38 வயது வர்த்தகரான சென் சீ, பிரின்ஸ் குரூப் என்ற சொத்து மற்றும் நிதி நிறுவனக் குழுமத்தின் தலைவராவார். அவர்மீது அமெரிக்கா இவ்வாண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று கள்ளப் பணப் பரிவர்த்தனை, கட்டாயமாக வெளிநாட்டினரை கம்போடியாவில் வேலைக்கு அமர்த்தியது ஆகிய மோசடிக் குற்றங்களுக்கான கைதாணையைப் பிறப்பித்தது.

சிங்கப்பூரின் விசாரணைகளில் காவல்துறைக்குத் துணையாகக் கள்ளப்பணப் பரிவர்த்தனைக்கு எதிரான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புத் தளம், சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் பல புலனாய்வு அமைப்புகள் இயங்குகின்றன.

மேலும், கைதுசெய்யப்பட்ட எஸ்ஆர்எஸ் ஆட்டோ நிறுவன உரிமையாளர் டானின் மகளான சென் சியாவ் சுவான் என்பவரிடம் காவல்துறை பேசிவருவதாகவும் அறியப்படுகிறது. அவர் சுப்ரீம் கார் ஃபைனான்ஸ் சர்விசஸ், ரொல்ஸ் பிளாட்ஃபார்ம், கார்ஸ் அண்ட் காப்பி ஆகிய நிறுவனங்களின் இயக்குநராவார்.

அந்த நிறுவனங்கள், தனியார் சொத்தான எண் 2, ஜாலான் கிள்ளான் பாராட் என்ற முகவரியில் செயல்படுவதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த தனியார் சொத்தும் சென் சியாவ் சுவானின் நான்காம் நிறுவனமான 2JKBக்குச் சொந்தமாகும்.

தந்தைக்கும் மகளுக்கும் இரண்டு கார் நிதி நிறுவனங்களுடனும் தொடர்பு இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைத்து விசாரணைகளும் கம்போடிய வர்த்தகர் சென் சீயை மையமாகக் கொண்டே நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்