தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் வேதி ஆலையில் பெரும் தீப்பிழம்பு

1 mins read
138c79b3-d5f7-4881-8cba-022596b932d4
ஜோகூர் பாருவிலுள்ள வேதித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட மின்துண்டிப்பைச் சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகளால் இந்தத் தீப்பிழம்புகள் ஏற்பட்டன என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. - படம்: CLOUDSPOTTING & SKYSPOTTING SINGAPORE/FACEBOOK

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 15) இரவு வானில் காணப்பட்ட பெரும் தீப்பிழம்பு ஜோகூரில் உள்ள ஒரு வேதித் தொழிற்சாலையிலிருந்து கிளம்பியது.

இதனை தேசிய சுற்றுப்புற வாரியம் தனது ஃபேஸ்புக் பதிவில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

‘லோத்தே கெமிக்கல் டைட்டன்’ என்ற வேதி நிறுவனத்தில் ஏற்பட்ட மின்தடையால், கிழக்கு ஜோகூர் பாருவில் பாசிர் கூடாங் பகுதியில் மின்சாரத்தை மீண்டும் இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்தடை புதன்கிழமை மாலை 4.13 மணியளவில் தொடங்கியதாக அந்த நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பதிவில் மறுநாள் வியாழக்கிழமை வெளியிட்டது. தடையைச் சரிசெய்யும் பணிகள் 6 மணிமுதல் தொடங்கி இரவு 9.30 மணிக்கு முடிவடைந்ததாகப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

பெட்ரோலியம் சார்ந்த வேதி ஆலைகளில் தீப்பிழம்புகள் வெளிப்படுவது வழக்கமான ஒன்றாகும். தண்ணீருடன் நீராவி மற்றும் கரியமில வாயு போன்ற கழிவுப்பொருள்களின் கலவை அங்கு எரியூட்டப்படுகிறது. பாதுகாப்பான முறையில் அவை தீப்பிழம்பாக வெளியேற்றப்படுகின்றன என்று வாரியம் விளக்கியது.

வழக்கமான அளவில் காற்றின் தரம் இருப்பதாக காற்றைக் கண்காணிக்கும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் நிலையங்கள் தெரிவித்துள்ளன. பொங்கோல் வட்டாரம் உள்பட சிங்கப்பூரின் வடகிழக்கு மற்றும் பாசிர் கூடாங் சார்ந்த ஜோகூர் நீரிணை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் வழக்க நிலையில் இருப்பதாகவும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்