அமெரிக்காவைத் தவிக்க விடும் பனிப்புயல்; பல எஸ்ஐஏ சேவைகள் ரத்து

1 mins read
fe5e1239-65dd-4757-bf13-6b023733cdcd
அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் அமெரிக்காவுக்கான பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எஸ்ஐஏ அறிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான சிங்கப்பூர் ஏர்லைன்சின் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர்கால ஃபெர்ன் புயல், விமானப் போக்குவரத்தை வெகுவாகப் பாதிப்பதோடு குறைந்தது 160 மில்லியன் அமெரிக்க மக்களை வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 24), திங்கட்கிழமை (ஜனவரி 25) ஆகிய இரண்டு நாள்களில் சிங்கப்பூர்-நியூயார்க், சிங்கப்பூர்-நுவார்க், ஃபிராங்பர்ட்-நியூயார்க் ஆகிய ஒன்பது விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எஸ்ஐஏ அறிவித்துள்ளது. அது, தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள ஆலோசனைக் குறிப்பில் நிலைமையைப் பொறுத்து மற்ற விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று கூறியிருந்தது. “விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்ற விமானங்களில் செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர். பயன்படுத்தாத பயணத்திற்கான கட்டணம் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும்,” என்று எஸ்ஐஏ மேலும் தெரிவித்தது. விமானக் கண்காணிப்பு அமைப்பான ‘ஃபிளைட்அவெர்’, அமெரிக்காவிற்குச் செல்லும் அமெரிக்காவிலிருந்து புறப்படும் 3,200க்கும் மேற்பட்ட வாரயிறுதி விமானங்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியது. அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் மத்திய வட்டாரங்களைத் தாக்கிய பிறகு நியூயார்க் நகரத்தை உள்ளடக்கிய நியூ மெக்சிகோவிலிருந்து கிழக்குக் கடலோரப் பகுதிகள் வரையிலான மக்கள்தொகை அதிகம் கொண்ட மத்திய அட்லாண்டிக், வடகிழக்கு மாநிலங்களைப் பனிப்புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோசுல், உறையவைக்கும் பனியால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்