தேர்தல் தோல்வி: புதிய அணுகுமுறையைக் கையாளும் கட்சிகள்

2 mins read
958b361a-d9e5-44a8-9f47-b0376de6eca8
மின்னிலக்கக் கட்சி இதழைத் தொடங்கியுள்ள முதல் எதிர்க்கட்சி எனும் பெருமை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேரும் என்று அதன் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத எதிர்க்கட்சிகள் மக்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க புதிய அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றன.

குடியிருப்பாளர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது போன்ற ஏற்கெனவே நடப்பில் உள்ள உத்திகளுடன் இந்தப் புதிய அணுகுமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

இது அக்கட்சிகளுக்கு. அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராவதற்குத் தேவையான ஐந்தாண்டு பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளின் வாக்கு விகிதம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பல எதிர்க்கட்சிகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தின.

தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 36.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

ஆகஸ்ட் 25ஆம் தேதி அதன் கட்சி இதழான ‘தி பால்ம்’ இணைய வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இதழ் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கருத்துகள், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான மாற்று தீர்வுகளை இந்த இதழ் மூலம் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தெரிவிக்கிறது.

மின்னிலக்கக் கட்சி இதழைத் தொடங்கியுள்ள முதல் எதிர்க்கட்சி எனும் பெருமை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேரும் என்று அதன் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

மற்றோர் எதிர்க்கட்சியான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி, AltGovSG.Online எனும் இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அது நிழல் அரசாங்கமாகச் செயல்படும். இத்தளம் வாயிலாக அது மாற்றுத் தீர்வுகளை முன்வைக்கும்.

சமூகக் கொள்கைகளுக்கான நிழல் அமைச்சராக அது தனது தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமன்னை நியமித்துள்ளது.

2030 பொதுத் தேர்தலுக்கான திட்டத்தை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டது.

இதன்மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் பயிற்சி பெற்ற வழிநடத்துநர்களைக் கொண்டு அரசியல் சார்பற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கி குடியியல் கல்வியைக் கற்பிப்பதும், எதிர்க்கட்சிகள் குடியுரிமை சமூக அமைப்புகள், கல்விமான்களுக்கான தேர்தல் சீர்திருத்தக் கூட்டணியை அமைப்பதும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்