நாட்டுப்பற்றைப் போற்றிய ரத்த தான முகாம்

நாட்டுப்பற்றைப் போற்றிய ரத்த தான முகாம்

1 mins read
feafea3f-2283-41dd-801b-d5480abe0e07
நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சியில் இம்முறை 139 பேர் ரத்த தானம் செய்தனர். - படம்: சன்லவ் இல்லம்
Google News Preferred Icon

தேசிய தினத்தையொட்டி சன்லவ் முதியோர் பராமரிப்பு இல்லம் நடத்திய ரத்த தான முகாமில் வெளிநாட்டினர் உள்ளிட்ட பலர் திரளாகப் பங்குபெற்று, ரத்த தானம் செய்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த இல்லம் நடத்திவரும் வருடாந்தர ரத்த தான முகாம், இவ்வாண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று சன்லவ் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரை நீடித்த இந்த நிகழ்ச்சியில் 139 பேர் ரத்த தானம் செய்தனர்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு முகாமில் அதிகமானோர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொண்டூழியர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு ஊழியர்கள், துடிப்புமிக்க மூப்படைதல் மையங்கள், முதியோர் பராமரிப்பு மையங்களின் பணியாளர்கள் எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டனர். 

ரத்தத்தைச் செயற்கையாக உருவாக்க முடியாது என்பதையும் அது மனித நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே நேரடியாகப் பெறப்பட வேண்டும் என்பதையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

“பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றும் நிலையில், எங்களது சக ஊழியர்களும் தாங்களாக முன்வந்து ரத்த தானம் செய்வதையும், அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதையும் பார்ப்பது மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்று சன்லவ் இல்லத்தின் தலைவரும் தலைமைத் திட்ட அதிகாரியுமான திரு எம்.கே. ராஜமோகன் கூறினார்.

“நாங்கள் ஒன்றிணைந்து, தேசிய தினத்தைப் பெருமையுடனும், இரக்கம், தாராள மனப்பான்மை, சமூகத்திற்குத் திரும்ப அளிப்பதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றுடனும் கொண்டாடுகிறோம்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்