சிங்கப்பூரில் பல வகை ரத்த சேமிப்பு இருப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், விடுமுறைக் காலத்தில் வெளிநாடு செல்வதற்கு முன்பாக ரத்த நன்கொடை செய்யும்படி மக்களுக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் வேண்டுகோள் விடுக்கிறது.
ஓ பிளஸ், ஓ மைனஸ், ஏபி மைனஸ் ஆகிய வகை ரத்த இருப்பு குறைந்துவிட்டதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க இணையத்தளம் தெரிவிக்கிறது.
ஓ பிளஸ் வகை ரத்தம்தான் மிகக் குறைவாக இருப்பில் உள்ளது என்பதை அது சுட்டியது.
ரத்த இருப்பு நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. போதிய அளவு, மிதம், குறைவு, மிகக் குறைவு ஆகியவை அந்த நான்கு வகைகளாகும்.
ஏ பிளஸ், ஏ மைனஸ், பி பிளஸ் ஆகிய வகை ரத்த இருப்பு மிதமாக உள்ளது. நீண்ட வார முடிவு நாள்களின்போதும் பள்ளி விடுமுறை நாள்களின்போதும் ரத்த நன்கொடை பொதுவாகவே 20% குறைவாக இருக்கும் என்று ஆணையம் குறிப்பிடுகிறது.
விடுமுறையில் கொடையாளர்கள் வெளிநாடு செல்வதே அதற்கான காரணம்.
சில நாடுகளுக்கு அல்லது சில நாடுகளில் சில பகுதிகளுக்குச் சென்று வருவோர் ரத்த நன்கொடை வழங்க முடியாமல் போய்விடக்கூடும். காரணம், அந்த நாடுகளில் இருந்தபோது மக்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு இருக்கலாம்.
ஜூன் விடுமுறை காலத்தில் அதிகமான சிங்கப்பூரர்கள் வெளிநாடு செல்வார்கள். அவர்கள் திரும்பி வரும்போது ரத்த நன்கொடை வழங்க முடியாமல் போகலாம்.
ஆகையால், வெளிநாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே ரத்த நன்கொடை வழங்கி ரத்த இருப்பை உறுதிப்படுத்தும்படி ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எந்த வகை ரத்தத்தைக் கொண்டிருப்போரும் அவசரகாலத்தில் ஓ வகை ரத்தத்தைப் பயன்படுத்த முடியும். இந்த வகை ரத்தத்திற்குத் தேவை எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆகையால், இதன் இருப்பு எப்போதுமே நிலையாக இருக்காது.
மருத்துவமனைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ரத்தக் கையிருப்பு இருந்ததில்லை என்பதைச் சுட்டிய ஆணையம், அரையாண்டு விடுமுறை வந்ததால் ரத்தக் கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டதாகக் கூறியது

