மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்தது முன்னோடித் தலைவர்கள் வகுத்த ரத்தமில்லாப் புரட்சி

2 mins read
7114ad8e-d0c7-4431-8e61-7ac7fcc98751
‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூல். - படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்
multi-img1 of 2

மலேசியாவிடமிருந்து 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரிந்தது அப்போதைய நிதி அமைச்சர் கோ கெங் சுவீ மற்றும் மலேசியத் துணைப் பிரதமர் துன் அப்துல் ரசாக்கால் வகுக்கப்பட்ட ரத்தமில்லாப் புரட்சியின் வெளிப்பாடு என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ குறிப்பிட்டதாகவும் அந்தப் பிரிவினை நிகழும் இறுதி நிமிடம்வரை அமரர் லீ அதுகுறித்து உறுதியற்ற நிலையில் இருந்ததாகவும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு லீ, தனியொரு நாடாகச் சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குமுன் சிங்கப்பூர் கடந்து வந்த வழித்தடங்களை நினைவுகூர்ந்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில், மலேசியாவை விட்டுச் சிங்கப்பூர் வெளியேறியது சார்ந்த வரலாற்றுத் தகவல்கள் முக்கிய இடம்பிடித்தன.

‘‘பிரிவினை நிகழ்ந்த சில ஆண்டுகளிலேயே, அதற்கான ஒப்பந்தத்தில் மிகுந்த தயக்கத்துடன் கையெழுத்திட்டவர்கள், குறிப்பாக, திரு லீ குவான் யூ, திரு எஸ்.ராஜரத்தினம், டாக்டர் தோ சின் சாய், திரு ஓங் பான் பூன் போன்றவர்கள்கூட பிரிவினைதான் சிங்கப்பூருக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம் என்ற முடிவுக்கு வந்தனர்,’’ என்றார் திரு லீ.

அவ்வகையில் எஸ்ஜி60 ஆண்டில், அப்போது டாக்டர் கோ செய்த செயல்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய திரு லீ, சிங்கப்பூரைத் தோற்றுவித்த தலைவர்கள் கற்பனை செய்ததற்கும் அப்பால் தற்போது நாடு செழித்து முன்னேறியுள்ளது என்று சொன்னார்.

மேலும், ‘‘இதுதொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஒப்புநோக்க, 1965 ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்தப் பிரிவினை நிகழாமல் இருந்திருந்தால், ஏதோ ஒரு நேரத்தில் இது எப்படியாவது நிகழ்ந்திருக்கும். ஆனால், பெரும்பாலும் அமைதியான முறையில் நிகழ்ந்திருக்காது,” என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர், மலேசியா என இரு நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மிகவும் ஆழமானவை என்றும் இருதரப்பும் பிரிந்து சென்றிருக்காவிட்டால், அந்த முரண்பாடுகள் தீர்க்க முடியாமல் இருந்திருக்கும் என்றும் மூத்த அமைச்சர் லீ சொன்னார். 

பிரிவினை சிற்பியாகச் சிங்கப்பூர் தரப்பில் திகழ்ந்தவர் டாக்டர் கோ என்று நாட்டின் முன்னோடி சட்ட அமைச்சர் பார்க்கர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு லீ, “சிங்கப்பூரும் மலேசியாவும் தனித்தனி திசையில் செல்ல வேண்டும் என்பதே டாக்டர் கோவின் ஒரே இலக்காக இருந்தது. அதற்கு உகந்த பேச்சுவார்த்தையை அவர் சிறப்பாக முன்னெடுத்தார்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்