புளூம்பெர்க் அவதூறு வழக்கு பத்திரிகை சுதந்திரம் பற்றியது அல்ல, உள்நோக்கம் உடையது: அமைச்சர்கள்

புளூம்பெர்க் அவதூறு வழக்கு பத்திரிகை சுதந்திரம் பற்றியது அல்ல, உள்நோக்கம் உடையது: அமைச்சர்கள்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jul 2026 - 7:35 pm

2 mins read

புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு பத்திரிகை சுதந்திரம் தொடர்பானது அல்ல என்றும், அது ஒரு செய்தி நிறுவனம் உள்நோக்கத்துடன் தனிமனிதர்களைக் குறிவைத்து, பொய்களின் அடிப்படையில் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதைத் தடுப்பது பற்றியது என்றும் அமைச்சர்கள் கா. சண்முகம், டான் சீ லெங் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அமைச்சர்களின் சொத்துப் பரிவர்த்தனைகள் குறித்து கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி புளூம்பெர்க் வெளியிட்ட கட்டுரையில் இரு அமைச்சர்களும் அவதூறாகச் சித்திரிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. 

இதையடுத்து, நீதிமன்றம் அமைச்சர்கள் இருவருக்கும் ஆளுக்கு $230,000 இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய ஊடகங்கள் உட்பட சில விமர்சகர்கள் இந்த வழக்கு பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். 

அதற்குப் பதிலளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17)  அமைச்சர்கள் இருவரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில், “சிங்கப்பூர் எப்போதும் ஆக்கபூர்வமான பத்திரிகை செயல்பாடுகளையும், துடிப்பான பொது விவாதங்களையும் ஆதரிக்கிறது.

“ஆனால், கருத்து சுதந்திரம் என்பது பொறுப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டும். ஆதாரமற்ற பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவதற்கு கருத்து சுதந்திரத்தில் இடமில்லை என்பதை நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புளூம்பெர்க் நிறுவனம் பொது நலன் சார்ந்த செய்தியை வெளியிடுவதாகக் கூறி, தங்களைக் குறிவைப்பதற்காக மட்டுமே அதை மாற்றியமைத்ததாக நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். 

பொறுப்பான ஊடகத் தரத்தைக் கடைப்பிடிக்கத் தவறிய அந்த நிறுவனம், நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாகக் கூறிக்கொண்டு தங்களின் செய்தி துல்லியமானது என வாதிடுவது முரண்பாடாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்அவதூறுவழக்கு