தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புளூம்பெர்க் நிறுவனத்துக்கு பொஃப்மா திருத்த உத்தரவு

2 mins read
02891a08-5f58-43bf-8c23-0eb97c485c4e
புளூம்பெர்க் கட்டுரையில் வெளியான தகவல்களை ஒரு பகுதியாகவோ முழுமையாகவோ வெளியிட்ட தி எட்ஜ் சிங்கப்பூர், தி இண்டிபென்டண்ட் சிங்கப்பூர், தி ஆன்லைன் சிட்டிசன் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூர் உயர்தர பங்களாக்களுக்கான பரிவர்த்தனைகள் குறித்து டிசம்பர் 12ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்த புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு, பொய்ச் செய்தி சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புளூம்பெர்க் கட்டுரையில் வெளியான தகவல்களை ஒரு பகுதியாகவோ முழுமையாகவோ வெளியிட்ட தி எட்ஜ் சிங்கப்பூர், தி இண்டிபென்டண்ட் சிங்கப்பூர், தி ஆன்லைன் சிட்டிசன் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணைவழி பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா) கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் இந்தத் திருத்த உத்தரவுகளைப் பிறப்பித்ததாக சட்ட அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்தது.

உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இருவர் சம்பந்தப்பட்ட சொத்துப் பரிவர்த்தனைகளை புளூம்பெர்க்கின் அந்தக் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

தங்களது சொத்துப் பரிவர்த்தனைகள் தொடர்பில் தாங்கள் அவதூறாகக் கருதும் அறிக்கைகளை வெளியிட்டதற்காக புளூம்பெர்க்கிற்கும் இதர செய்தி நிறுவனங்களுக்கும் எதிராக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இரு அமைச்சர்களும் டிசம்பர் 16ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவுகளில் தெரிவித்திருந்தனர்.

சட்ட ஆலோசனை பெற்ற பிறகு, அந்தக் கட்டுரை தொடர்பில் கோரிக்கை கடிதங்களை அவர்கள் வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

பொஃப்மா திருத்த உத்தரவின்கீழ், புளூம்பெர்க் அதன் இணையப்பக்கத்திலும் ஃபேஸ்புக், எக்ஸ் தளப் பதிவுகளிலும் குறிப்பு ஒன்றைச் சேர்க்க வேண்டும். அதில், தனது கட்டுரை குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதை விவரிக்கும் இணைப்பு ஒன்று அக்குறிப்பில் இடம்பெற வேண்டும்.

புளூம்பெர்க் கட்டுரையை முழுமையாக வெளியிட்ட தி எட்ஜ் சிங்கப்பூர் நிறுவனமும், அதன் இணையப்பக்கத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்தக் குறிப்பை வெளியிட வேண்டும்.

திங்கட்கிழமை பிற்பகல் அதன் இணையப்பக்கத்திற்குச் சென்று பார்த்ததில், அதில் திருத்தக் குறிப்பு இடம்பெற்றிருந்தது. சம்பந்தப்பட்ட கட்டுரை நீக்கப்பட்டுவிட்டதாக அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டது.

புளூம்பெர்க்கின் தவறான அறிக்கைகள் சிலவற்றை தங்களது இணையப்பக்கங்களில் சொந்த கட்டுரைகளில் வெளியிட்ட தி இண்டிபென்டண்ட் சிங்கப்பூர், தி ஆன்லைன் சிட்டிசன் நிறுவனங்களும் திருத்தக் குறிப்பை வெளியிட வேண்டும் என்று சட்ட அமைச்சு கூறியது. தங்கள் கட்டுரைகள் பதிவிடப்பட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் தளங்களிலும் அந்நிறுவனங்கள் அக்குறிப்பை வெளியிட வேண்டும்.

அவை இரண்டும் திருத்தக் குறிப்புகளை வெளியிட்டுள்ளன. தி இண்டிபென்டண்ட் சிங்கப்பூர் அதன் கட்டுரையை நீக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்