தியோங் பாருவில் உள்ள செங் போ பேட்டையின் குடியிருப்பாளர்கள் நீல நிற மறுசுழற்சித் தொட்டிகளை முழுமையாகக் கைவிட முடிவெடுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு அந்தப் பேட்டையில் முன்னோடித் திட்டமாக அந்த மறுசுழற்சித் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அந்தத் தொட்டிகள் அடிக்கடி அசுத்தப்படுவதுடன் குப்பைத் தொட்டியாகவும் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, மீண்டும் அந்தத் தொட்டிகளைப் பேட்டையில் வைக்க வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். மாறாக, மறுசுழற்சி செய்வதற்கான பொருள்களைக் குடியிருப்பாளர்கள் தியோங் பாரு சமூக மன்றத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகக் கூறினர்.
சனிக்கிழமையன்று (ஜூன் 27) அறிமுகம் செய்யப்பட்ட மறுசுழற்சி இயந்திரத்தில் அந்தப் பொருள்களை வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குடியிருப்பாளர்கள் முன்னெடுத்த ‘லவ் தியோங் பாரு’ திட்டத்தின்கீழ், மறுசுழற்சிப் பொருள்களை அவர்கள் சமூக மன்றத்துக்குக் கொண்டுசென்றனர்.
ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து ஜூன் 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 4,000 கிலோகிராம் எடைகொண்ட மறுசுழற்சிப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
அவற்றுள் 1,500 கிலோகிராம் எடையுள்ள அட்டைப் பெட்டிகள், காகிதங்கள் உள்பட 900 கிலோகிராம் எடையுள்ள கண்ணாடிகளும் 600 கிலோகிராம் எடையுள்ள பிளாஸ்டிக்கும் சேகரிக்கப்பட்டன.
மறுசுழற்சி இயந்திரத்தை அறிமுகம் செய்துவைத்த தியோங் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங், 49 புளோக்குகளில் உள்ள 1,200க்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்தோர் எப்போது வேண்டுமானாலும் மறுசுழற்சிக்காக பொருள்களை இயந்திரத்தில் போடலாம் என்றார்.
குடியிருப்பாளர்கள் உள்பட தேசியச் சுற்றுப்புற அமைப்பு, நகர மன்றம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகே கிட்டத்தட்ட 30 நீல நிறத் தொட்டிகள் பேட்டையிலிருந்து அகற்றப்பட்டதாக ஃபூ குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு மறுசுழற்சித் தொட்டிகள் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

