புளூஎஸ்ஜி நிறுவனம், புதிய கார் பகிர்வுச் சேவையுடன் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. புதிய சேவையான ஃப்ளெக்ஸாரை வாடிக்கையாளர்கள், இம்மாதம் (ஏப்ரல்) 15ஆம் தேதியிலிருந்து பயன்படுத்தலாம்.
புளூஎஸ்ஜியைப் போன்றே ஃப்ளெக்ஸாரும் செயல்படும். வாடிக்கையாளர்கள், ஓரிடத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு இன்னோர் இடத்தில் அதனை விட்டுச்செல்லலாம்.
ஆனால் புளூஎஸ்ஜி போல் அல்லாமல், மின் வாகனங்களோடு வழக்கமான எரிபொருள் இயந்திரங்களைக் கொண்ட கார்களும் அந்தச் சேவையில் இடம்பெற்றிருக்கும். அத்துடன் ஃப்ளெக்ஸார், வாடிக்கையாளர்களிடம் உறுப்பியக் கட்டணத்தையும் வசூலிக்காது.
அவர்கள் முன்பணமும் கட்டத் தேவையில்லை. காரை வாடகைக்கு எடுத்த நேரத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு கொடுக்கவேண்டியிருக்கும். அதனைக் குறைக்கும் பொருட்டுக் கூடுதல் கட்டணத்தை வாகனத்தை எடுக்கும்போது செலுத்தலாம்.
வாடகைக்கு எடுத்த பின்னர் முதல் ஐந்து நிமிடங்களுக்குக் கட்டணம் இல்லை. அதன் பிறகு, 20வது நிமிடம்வரை, நிமிடத்திற்கு 52 காசு செலுத்த வேண்டும். வாடகைக்கு எடுக்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, கட்டணம் குறையத் தொடங்கும். ஒரு மணிநேரத்திற்குப் பின்னர், அது நிமிடத்திற்கு 44 காசாகும்.
பயனீட்டாளர்கள், எரிபொருளை மீண்டும் நிரப்பவோ மின்னூட்டம் செய்யவோ கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதனை ஃப்ளெக்ஸார் நிர்வகித்துக்கொள்ளும்.
தற்போதைக்குப் பொங்கோல், செங்காங், ஹவ்காங், தெம்பனிஸ், அங் மோ கியோ, தோ பாயோ உள்ளிட்ட சிங்கப்பூரின் மத்திய, வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் சேவை வழங்கப்படும்.
புதிய சேவையைச் சென்ற மாதத்திலிருந்து பயனீட்டாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ப்ளெக்ஸார் செயலியை இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

