‘பிஎம்எக்ஸ்’ சைக்கிள் பந்தயத்தடம் திறப்பு

‘பிஎம்எக்ஸ்’ சைக்கிள் பந்தயத்தடம் திறப்பு

2 mins read
c7f8e468-e0af-436e-b535-2fd8cdcc5b54
சுவா சூ காங் அவென்யூ 7ல் 1,200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ‘த பிரிக்ஸ்’ மையத்தில், கூரைவேய்ந்த கூடைப்பந்துத் திடல், பெரியவர்களுக்கும் மூத்தோருக்குமான உடற்பயிற்சி இடங்கள், விளையாட்டுப் பூங்கா போன்ற பல வசதிகள் இடம்பெறுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

‘பிஎம்எக்ஸ்’ எனப்படும் சைக்கிள் பந்தயத் தடத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரின் ஒரே பல் விளையாட்டு வசதி இடம், பிரிக்லேண்ட்- தெங்காவின் பந்தயத் தடத்தில் திறந்துள்ளது.

வட்டாரவாசிகள் தங்கள் வீட்டுக்கு அருகே பலவகையான உடற்பயிற்சிகளில் ஈடுபட இந்த இடம் வழி வகுக்குகிறது.

சுவா சூ காங் அவென்யு 7ல்  அமைந்துள்ள ‘த ப்ரிக்ஸ்’ என்ற அந்த இடம், 1,200 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. “இது சுவா சூ காங் மக்கள் அனைவரும் ஒன்று கூடி – பாஸ்கெட்பால், பிக்கிள்பால், பேட்மிண்டன் விளையாடவோ அல்லது உடற்பயிற்சிக்கூடத்தைப் பயன்படுத்தவோ கூடிய ஒரு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இடமாகும்,” என்று ஆகஸ்ட் 15ல் நடைபெற்ற திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார்.

இந்தத் திறப்பு விழா, பிரிக்லேண்ட்-தெங்கா பிரிவின் தேசிய தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. 

இதில் வர்த்தக, தொழில் அமைச்சரும் (எரிசக்தி, தொழில்துறை)  சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டான் சீ லெங், வெளியுறவுத் துணை அமைச்சருமான சுல்கர்னைன் அப்துல் ரஹீம் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சுவா சூ காங் குழுத்தொகுதியின் பிரிக்லேண்ட்-தெங்கா பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சியாவ், ‘த பிரிக்ஸ்’ (The Bricks) உருவாக்கத்திற்கான யோசனைக்கு அந்தக் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டான் வீ காரணம் எனப் பாராட்டினார்.

‘த பிரிக்ஸ்’ மையத்தின் முக்கிய அம்சமாக 7,500 சதுர மீட்டர் பரப்பளவிலான சைக்கிள் ஓட்டும் பூங்காவின் ஒரு பகுதியாக ‘பிஎம்எக்ஸ்’ தடம் (track) திகழ்கிறது.

 “2029ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போது, ‘பிஎம்எக்ஸ்’ சைக்கிள் ஓட்டுதல் போட்டி இங்குதான் நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் நமது பகுதி மக்கள் சிங்கப்பூர்க் குழுவை நேரில் கண்டு உற்சாகப்படுத்தி, அவர்களுக்குச் சொந்த மண்ணில் விளையாடும் சாதகமான வாய்ப்பை வழங்க முடியும்,” என்று திரு சியாவ் கூறினார்.

சிங்கப்பூர்ச் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் தலைவர் ஹிங் சியோங் சென் கூறுகையில், இந்தத் தடம் ‘பிஎம்எக்ஸ்’ விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்க்க உதவும் என்றும் அவர்கள் சைக்கிள் ஓட்டுதலின் பிற பிரிவுகளுக்கும் செல்ல வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார். 

சிங்கப்பூரில் இதற்கென்ற சிறப்புப் பயிற்சி மையங்கள் இல்லாததால், இங்குள்ள ‘பிஎம்எக்ஸ்’ வீரர்கள் பயிற்சி பெற மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகத் திரு ஹிங் குறிப்பிட்டார். 

“இப்போது இங்கு அமைந்துள்ள இந்த வசதியின் மூலம் நாம் மற்ற நாடுகளுக்கும் உதவ முடியும். தென்கிழக்காசியா முழுவதும் தொடர் போட்டிகளை அமைப்பதில் நாமும் அவர்களுடன் இணைவோம் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்