‘ரிட்டர்ன் ரைட்’ இயந்திரங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வலியுறுத்து

‘ரிட்டர்ன் ரைட்’ இயந்திரங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வலியுறுத்து

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 6:17 pm

1 mins read

பானக் கலன்களைத் திரும்பப் பெறும் ‘ரிட்டர்ன் ரைட்’ இயந்திரங்களைப் பொதுமக்கள் பொறுப்புடன் பயன்படுத்துமாறு தேசியச் சுற்றுப்புற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அத்தகைய இயந்திரங்களைச் சிலர் தெரிந்தே தவறான முறையில் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அமைப்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சிஎன்ஏ ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைப்பின் பேச்சாளர், பானக் கலன்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் இயங்கும் இயந்திரங்களைத் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்துவதை அமைப்பு கடுமையாகக் கருதுவதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தெரிவித்தார்.

“இத்திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பிசிஆர்எஸ் நிறுவனத்திற்கு நினைவூட்டப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து வலுப்படுத்த அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கையில் வைத்திருந்த தகுதியுள்ள கலனின் பட்டைக் குறியீட்டை வருடிக்கொண்டே, தகுதியற்ற கலன்களை ஆடவர் ஒருவர் இயந்திரத்திற்குள் செலுத்துவது அண்மை காணொளியில் பதிவானது.

அனைத்து ‘ரிட்டர்ன் ரைட்’ இயந்திரங்களிலும் மின்னிலக்கப் பரிவர்த்தனைப் பதிவுகள், 24 மணி நேரக் கண்காணிப்புப் படக்கருவி, மோசடிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக பிசிஆர்எஸ் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைப் போக்குகளைக் கண்டறிய கட்டமைப்பு முழுவதும் உள்ள தரவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. எந்தவொரு மோசடிச் செயலும் விசாரணைக்கும் தகுந்த நடவடிக்கைக்கும் உரிய அதிகாரிகளிடம் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்