ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகே உள்ள கடற்பகுதியிலிருந்து சிறுவன் ஒருவனின் உடலை சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டது.
சனிக்கிழமை மாலை 9.55 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை அங்கு விரைந்தது. அப்போது கடலில் சிறுவனின் உடல் மிதந்து கொண்டிருந்தது.
அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிறுவனின் உடலை மீட்டு கரை சேர்த்தது. ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை (ஆகஸ்ட் 31) சிறுவனின் உடல் காவல்துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கிடையே கண்டுபிடிக்கப்பட்ட உடல், காணாமல்போன 11 வயது முஹமட் ஹைரில் எஃபெண்டி என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
ஹைரில் கடைசியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை 11.05 மணி அளவில் புளோக் 29 மரின் கிரசென்ட் வட்டாரத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேநாள் இரவு ஹைரில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களும் காவல்துறையினரும் காணாமல்போன சிறுவனின் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு அவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தன்னை திருவாட்டி அய்ன் என்று மட்டுமே குறிப்பிட்ட ஹைரிலின் தாயார் தனது மகன் சிறப்புக் கவனிப்பு தேவைப்படுபவர் என்றும் அதிகம் பேசமாட்டார் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியிருந்தார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹைரிலை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் அடையாளம் கண்டுபிடித்துச் சொன்னதாகக் காவல்துறை கூறியது.
முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையே, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மட் ஃபைஷால் இப்ராஹிம், மறைந்த ஹைரிலின் பெற்றோரை, உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
“ஹைரிலுக்கு 11 வயதுதான் ஆகிறது, அவர் ஒரு சிறப்புக் கவனிப்பு குழந்தை, அவரது பெற்றோர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு தந்தையாக, அவரது பெற்றோர் அனுபவிக்கும் வலியை என்னால் உணர முடிகிறது. இந்தச் சிரமமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை, பொறுமை மற்றும் ஆறுதலை வழங்க வேண்டும் என்று நான் ‘அல்லா’வை பிரார்த்திக்கிறேன்.” என்று ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நிகழ்ந்த சம்பவம் குறித்த பல காணொளிகள், படங்கள் சமூக ஊடகத்தில் பரவின.
சிறுவனின் குடும்பத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் காணொளிகளையும் படங்களையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டது.

