அங் மோ கியோ அவென்யூ 8ல் உள்ள புளாக் 510 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தை அடுத்து, அண்டை வீட்டுக்காரர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வீட்டில் தனியாக வசித்து வந்த 61 வயது முதியவர் ஒருவர் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டனர். அவர் இறந்துவிட்டதாகச் சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
உடல்நலக் குறைவால் நடமாட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்ட அந்த முதியவர், உடல் எடை காரணமாக தனிநபர் நடமாட்டக் கருவியைப் பயன்படுத்தியவர். அவர் ஏறத்தாழ ஒரு வார காலமாக வெளியே எங்கும் காணப்படவில்லை என்றும் சமூகப் பணியாளரால் தினமும் வீட்டு வாசலில் வைக்கப்படும் உணவுப் பொட்டலங்கள் எடுக்கப்படாமல் அப்படியே இருந்ததாகவும் அண்டைவீட்டார் தெரிவித்தனர்.
மாண்டவர் திருமணமாகாதவர் என்றும் அவருக்குப் பிள்ளைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரைக் கடந்த நான்கு அல்லது ஐந்து ஐந்து ஆண்டுகளாகச் சந்திக்கவில்லை என்று அவரது சகோதரர் தெரிவித்தார்.
இந்த மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று கூறிய காவல்துறையினர், இதுகுறித்த விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

