சிராங்கூனில் ஆடவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிப்பு

சிராங்கூனில் ஆடவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிப்பு

2 mins read
8364296c-080e-4fa3-ba87-36675214f260
படம்: ஃபேஸ்புக்/ஷின்மின் -

சிராங்கூன் சென்ட்ரல் டிரைவ், புளோக் 257ன் வெற்றுத்தளத்தில் 59 வயது ஆடவர் ஒருவர் இறந்துகிடந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-1-2023) கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு இருநாள்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த துப்புரவாளர் ஒருவர், முதன்முதலில் அந்த ஆடவரின் உடலைக் கண்டார்.

கடைசியாக அந்த ஆடவரைக் கடந்த 14ஆம் தேதி தாம் கண்டதாக அந்தத் துப்புரவாளர் கூறினார் என்று ஷின்மின் நாளிதழ் செய்தி தெரிவித்தது.

அந்த வீவக புளோக்கிற்கும் கார்நிறுத்தப் பூங்காவிற்கும் இடைப்பட்ட வெற்றுத்தளத்தில் அவர் இரவு நேரத்தைக் கழிப்பதைத் அத்துப்புரவாளர் அடிக்கடி கண்டுள்ளார்.

அவ்வகையில், கடந்த 14ஆம் தேதியன்று தாம் கண்டபோது அவர் அயர்ந்து தூங்குவதுபோல் தெரிந்ததால் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று அந்தத் துப்புரவாளர் சொன்னார்.

ஆயினும், அப்பகுதி குடியிருப்பாளர்களில் சிலர் அந்த ஆடவரை அதற்குமுன் கண்டதில்லை என்று சொன்னதாக ஷின்மின் செய்தி தெரிவித்தது.

மறுநாள் 15ஆம் தேதி பணிவிடுப்பு என்பதால் 16ஆம் தேதி காலை 6 மணியளவில் வேலைக்குத் திரும்பினார் அந்தத் துப்புரவாளர்.

அப்போது, அந்த ஆடவர் இருந்த இடத்தைக் கடந்தபோது துர்நாற்றம் வீசியதை அவர் உணர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, அருகே சென்றுபார்த்தபோது அவர் இறந்துவிட்டதை அந்தத் துப்புரவாளர் உணர்ந்தார்.

அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக அதுபற்றி தன் முதலாளிக்குத் தகவல் தெரிவித்தார். அந்த முதலாளி பின்னர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

அந்த ஆடவரின் சடலம் அழுகத் தொடங்கிவிட்டதால் அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பத்து மீட்டர் தொலைவிலிருந்தும் உணரப்பட்டதாக ஷின்மின் செய்தி குறிப்பிட்டது.

அந்த ஆடவரின் மரணத்தை இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தி, காவல்துறை விசாரித்து வருகிறது. ஆயினும், அந்த ஆடவரின் மரணம் தொடர்பில் காவல்துறை எவரையும் சந்தேகிக்கவில்லை.