போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக அக்டோபர் 8ஆம் தேதியன்று சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியர் பன்னீர்செல்வம் பரந்தாமன் நடத்தப்பட்ட விதம் குறித்து பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக மலேசியச் செய்தித்தளமான மலேசியநவ்வுக்கு பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொய்ச் செய்திகளை அச்செய்தித்தளம் நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலேசியநவ் செய்தித்தளத்துக்கு பொஃப்மா உத்தரவைப் பிறப்பிக்கும்படி இணையவழி பொய்ச் செய்தி மற்றும் சூழ்ச்சித் திறனுக்கெதிரான பாதுகாப்புச் சட்டத்தை நிர்வகிக்கும் பொஃப்மா அலுவலகத்துக்கு சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் உத்தரவிட்டார்.
அதன்படி, மலேசியநவ் செய்தித்தளம் அதன் இணைப்பக்கம், ஃபேஸ்புக் பக்கம், எக்ஸ் தளம், லிங்க்ட்இன் பதிவுகளில் பதிவிட்ட செய்திக்குப் பக்கத்தில் திருத்தத்தைப் பதிவிட வேண்டும்.
சட்ட விதிமுறை புறக்கணிக்கப்பட்டு பன்னீரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மலேசியநவ் பதிவிட்டிருந்தது என்றும் அது உண்மையல்ல என்றும் உள்துறை அமைச்சு கூறியது.
மரண தண்டனை எதிர்நோக்கும் அனைத்துக் கைதிகளும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அது வலியுறுத்தியது.
மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் கைதிகள், அவர்கள் விண்ணப்பம் செய்யக்கூடிய அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட்ட பிறகும் மரண தண்டனை தீர்ப்பில் மாற்றம் இல்லாமல் போகும் பட்சத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக உள்துறை அமைச்சு கூறியது.
இது பன்னீருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கணிசமான உதவி வழங்கியவர் என்ற சான்றிதழை பன்னீருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வழங்காதது தொடர்பாகவும் மலேசியநவ் தளத்தில் பொய்ச் செய்தி பதிவிட்டிருந்தது.
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களைத் தடுக்க மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு கணிசமான அளவுக்கு உதவியதாகக் கருதப்படுவோருக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
தாம் கொடுத்த தகவலை வைத்து ஸாம்ரி தாஹிர் எனும் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டதாக பன்னீர் வாதிட்டிருந்தார்.
ஆனால் அதிகாரிகளுக்குப் பன்னீர் கணிசமான அளவுக்கு உதவி வழங்கவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
பன்னீருக்கும் மலேசியப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் இடையிலான ரகசிய சந்திப்புக்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஏற்பாடு செய்திருந்ததாக மலேசியநவ் தெரிவித்தது.
அப்போது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் மலேசியக் காவல்துறை சீருடை அணிந்திருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சந்திப்பு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி மலேசியக் காவல்துறைச் சீருடை அணியவில்லை என்று உள்துறை அமைச்சு கூறியது.
பன்னீரின் உடைமைகள் அனைத்தும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று அவரது குடும்பத்தை சிங்கப்பூர் சிறைத்துறை ஏமாற்றி படிவம் ஒன்றில் அவர்களை கையெழுத்துப் போட வைத்ததாகவும் மலேசியநவ் செய்தித்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பன்னீர் கைப்பட எழுதிய கடிதங்கள், கவிதைகள் எல்லாவற்றையும் அதிகாரிகள் சோதனையிட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
சிறைச்சாலையின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதி சில பக்கங்கள் அகற்றப்பட்டதாக உள்துறை அமைச்சு கூறியது.
பன்னீரின் குடும்பத்தாரிடம் அவரது உடைமைகளை ஒப்படைத்தபோது சில ஆவணங்களைக் காணவில்லை என்று அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக சிறைத்துறை கூறியது.
படிவத்தில் கையெழுத்திடாமலேயே பன்னீரின் குடும்பத்தார் அவரது உடைமைகளைக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.


