விரிசல் நிறைந்த அனைத்துலகப் பொருளியலில் மாற்றுவழிகளைத் தேடும் வர்த்தகங்களையும் முதலீடுகளையும் ஈர்க்கும் தடையற்ற, போட்டித்தன்மைமிக்க தனிச் சந்தையாக ஆசியான் மாற வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அந்த நிலையை அடைய துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை என்று ஜூலை 5ஆம் தேதி யூடியூப்பில் வெளியிட்ட காணொளிச் செய்தி மூலம் பிரதமர் வோங் தெரிவித்தார்.
ஆசியானின் பத்து நாடுகளும் தனித்தனியாக எடுத்துக்கொண்டால் சிறியது என்றாலும் ஒட்டுமொத்தமாக அவை பலம் வாய்ந்தவை என்றார் அவர்.
ஆசியான் நாடுகளில் இன்று 700 மில்லியன் மக்கள் இருக்கின்றனர். உலகில் அது ஐந்தாம் ஆகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் அது நான்காம் இடத்துக்கு முன்னேறும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
ஆசியான் அதன் மொத்த ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்கு அடுத்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.
ஆசியானின் தலைநகரங்களுக்கு அறிமுகப் பயணங்களை அண்மையில் முடித்துள்ள பிரதமர் வோங், நிலைமை சாதகமாக வரும்போது மியன்மாருக்கும் செல்ல விரும்புவதாகச் சொன்னார்.
“நிலையான அமைதி, நிலைத்தன்மை, ஆசியானின் வளர்ச்சி நமது ஒட்டுமொத்த வட்டாரத்தையும் உருமாற்றும். அதன்வழி நல்ல வேலைகள், வாய்ப்புகள் கிடைப்பதோடு அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
அதை அடைவதற்கான அடித்தளம் ஆசியான் பொருளியல்களின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இருப்பதாக அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
தடையற்ற, போட்டித்தன்மைமிக்க தனிச் சந்தையாக மாற, ஆசியான் அதன் வர்த்தக, முதலீட்டுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்ற பிரதமர் வோங், எல்லை தாண்டி செயல்படுவதை நிறுவனங்களுக்குச் சுலபமாக்க வேண்டும் என்றார்.
ஆசியான் நாடுகளுக்கு இடையே மின்னிலக்கப் பொருளியலை அமைத்து சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றின் கட்டணமுறை கட்டமைப்புகளை இணைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில், மின்சார விநியோகம் ஆகிய உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் வோங், உலகத்துடன் இருக்கும் அதன் பங்காளித்துவத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.