ஹவ்காங் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 வயதுச் சிறுமி கைது

ஹவ்காங் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 வயதுச் சிறுமி கைது

படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2026 - 7:41 pm

1 mins read

ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள சின்மின் உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த வாரம் விடுக்கப்பட்ட போலியான வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக 15 வயதுச் சிறுமியைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை அந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி பள்ளியின் மாணவர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், காவல்துறையினரும் பள்ளி ஊழியர்களும் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக 15 வயதுச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) காவல்துறை உறுதிசெய்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கைது விவரத்தைக் காவல்துறை வெளியிட்டது.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள் குறித்த தவறான தகவலைப் பரப்பியது தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மிரட்டல் எவ்வாறு பள்ளிக்கு அனுப்பப்பட்டது, பள்ளியின் செயல்பாடுகள் எவ்வளவு நேரம் பாதிக்கப்பட்டன என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தச் சிறுமிக்கு ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது $50,000 வரை அபராதம் அல்லது அவை இரண்டும் விதிக்கப்படலாம்.

பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களைக் கடுமையாகக் கருதுவதாகவும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே பரப்புவோர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்