சிங்கப்பூரிலிருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 5) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அபாயகரமான பொருள் குறித்து போலியான தகவலைக் கொடுத்ததற்காக 22 வயது அஸிம் ஷா அபுபக்கர் ஷா என்ற ஆடவர்மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சிங்கப்பூரரான அஸிம் பிப்ரவரி 14ஆம் தேதி எத்திஹாட் விமானத்தில் இருந்தபோது ‘ஃபுரூட்லூப்ஸ்19’ (fruitloops_19) என்ற தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து பதிவிட்டதாக நம்பப்படுகிறது என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
“விமானத்தை வெடிவைத்து தகர்க்கப்போகிறேன் என்று எவருக்கும் தெரியாது” என்று ஆடவர் குறிப்பிட்டதை 16 பேர் பார்த்ததாகவும் கூறப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து இரவு 7.20 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
பதிவு வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் விமான நிலையக் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அஸிமை அடையாளம் கண்டு, அவர் அபுதாபிக்குப் புறப்படவிருக்கும் விமானத்தில் இருப்பதை உறுதிசெய்தனர்.
ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் பறக்கவிருந்தபோது சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டது. அதையடுத்து அஸிம் கைதுசெய்யப்பட்டார்.
அஸிமிடம் ஆபத்தான பொருள்கள் இல்லை என்றும் வெடிகுண்டு மிரட்டலை நிறைவேற்றுவதற்கு எந்த வழியும் இல்லை என்றும் பின்னர் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர்.

