சின்மின் உயர்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சின்மின் உயர்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 mins read
பள்ளி நிர்வாகம் உடனடியாக அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியது
a51a2f53-0dcf-46cb-a21a-9360a94e5bfe
பெற்றோருக்கு அனுப்பப்பட்ட செய்தியில், காலை 8.28 மணிக்கு மாணவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சின்மின் பள்ளி தெரிவித்தது. - படம்: கூகல் இணையத்தளம்
Google News Preferred Icon

ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள சின்மின் உயர்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் பள்ளியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தியில், வியாழக்கிழமை காலை 8.28 மணிக்கு மிரட்டல் குறித்துத் தெரியவந்ததும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

“வெடிகுண்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய காவல்துறையினர் பள்ளியில் முழுமையாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்குரிய எதையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்று பள்ளி நிர்வாகம் உறுதிசெய்தது.

பள்ளி மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு மீண்டும் திரும்பிவிட்டதாகவும் பாடங்கள் வழக்கம்போலத் தொடங்கியுள்ளதையும் நிர்வாகம் குறிப்பிட்டது.

மிரட்டல் எவ்வாறு பள்ளிக்கு அனுப்பப்பட்டது, எவ்வளவு நேரம் பள்ளியின் செயல்பாட்டுக்குத் தடங்கல் ஏற்பட்டது என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

‘பேரன்ட்ஸ் கேட்வே’ செயலி வழியாகப் பெற்றோருக்கு இச்சம்பவம் தெரிவிக்கப்பட்டதாக உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவரின் அடையாளம் தெரிவிக்க விரும்பாத தாயார் ஊடகத்திடம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு அரசாங்க தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து மேம்படுத்தியுள்ள செயலி அதுவாகும். அதன்வழியாக பள்ளிகள் நேரடியாகப் பெற்றோரிடம் முக்கிய அறிவுப்புகள் குறித்து தொடர்புகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மாணவர்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பிவிட்டதாகப் பள்ளி அறிவித்துள்ளதால் தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று அந்தத் தாயார் கருத்துரைத்தார்.

மேல்விவரங்களுக்குக் கல்வி அமைச்சையும் காவல்துறையையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.

தீங்கு விளைவிக்கக்கூடியத் தவறான தகவலைப் பரப்பியதாகக் கருதப்படும் குற்றச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் சிறை, $50,000 அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
உயர்நிலைப் பள்ளிவெடிகுண்டு மிரட்டல்சிங்கப்பூர் காவல் துறைநிர்வாகம்மாணவர்கள்ஆசிரியர்கள்ஊழியர்கள்பாதுகாப்பு