புத்தகப் பிரியர்கள், சிங்கப்பூர் இலக்கியப் புத்தகங்களை இனி எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைக் கொண்டும் வாங்கலாம்.
சிங்கப்பூரர்கள், அடுத்த மாதம் (மார்ச் 2026) 1ஆம் தேதி முதல், ‘எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை’யைப் (SG Culture Pass) பயன்படுத்திப் புத்தகக் கடைகளில் சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளை வாங்க இயலும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கலாசாரச் சிறப்புத்தொகை, இன்னும் அதிகமான சிங்கப்பூரர்களைச் சென்றடைவதும் கலை, கலாசாரத் துறைக்குள் திட்டத்தை விரிவுபடுத்துவதுமே நோக்கம் என்று அமைச்சு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கை கூறியது.
விரைவில் தொடங்கப்படவுள்ள அத்திட்டத்தில் பங்குபெறும் அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தகக் கடைகளில் ஏறத்தாழ 1,500 உள்ளூர் இலக்கியப் படைப்புகள் விற்பனைக்குக் கிடைக்கும். அதனைக் கலாசாரச் சிறப்புத்தொகையைக் கொண்டு வாங்கலாம்.
புத்தகங்கள் எங்கு விற்கப்படுகின்றன என்பதை அறிய விரும்புவோர் https://sgculturepass.gov.sg இணையப்பக்கத்தை நாடலாம்.
திட்டத்திற்கான இலக்கியப் படைப்பு சார்ந்த பட்டியலில், சிங்கப்பூர்க் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் எழுதிய தமிழ், ஆங்கில, சீன, மலாய் மொழிப் புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் உள்ளிட்டவை அடங்கும்.
அட்டையில் ஒட்டப்பட்டுள்ள ‘எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை’ எனும் அதிகாரபூர்வ ஒட்டுவில்லையைக் கொண்டு புத்தகங்களை அடையாளம் காணலாம்.
சிங்கப்பூர் வாசகர்கள் அவற்றை எளிதாகப் பெறும் வகையில், தற்காலிக விற்பனை அங்காடிகள் (pop-ups), புத்தகக் கண்காட்சிகள், விழாக்கள் மூலமாகவும் இலக்கியப் படைப்புகள் விற்பனை செய்யப்படும் என்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
புத்தக விற்பனை உட்பட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை எளிதாக்க உள்ளூர் இலக்கியத் துறையுடன் அணுக்கமாய்ப் பணியாற்றியுள்ளதாக அமைச்சு கூறியது. பயனீட்டாளர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவதையும் அது உறுதி செய்யும் என்றது அமைச்சு.
கலாசாரச் சிறப்புத்தொகையைக் கொண்டு புத்தகம் வாங்குவதன் தொடர்பில் எழும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கப் புத்தகக் கடை ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது.
திட்டத்தின் மூலம் அதிகமான சிங்கப்பூரர்கள் கடைகளுக்குச் சென்று சிங்கப்பூரின் பலதரப்பட்ட குரல்களையும் கதைகளையும் அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்று அமைச்சு நம்புகிறது. அதன்வழி உள்ளூர்க் கலாசாரத்தையும் அடையாளத்தையும் வலுப்படுத்த இயலும் என்றும் அது நம்பிக்கை கொண்டுள்ளது.
உள்ளூர்க் கலை, மரபுடைமை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க 18 வயதை எட்டிய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் $100 மதிப்பிலான கலாசாரச் சிறப்புத்தொகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு (2025) வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார்.

