சுற்றுலாப் பயணங்களுக்கான முன்பதிவுகளைக் கையாளும் புக்கிங்.காம் (Booking.com) இணையத்தளம் ஊடுருவப்பட்டதை அடுத்து வாடிக்கையாளர்களின் விவரங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பல்வேறு பயண முன்பதிவுகளைப் பாதிக்கும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாக இணையத்தளம் அதன் பயனீட்டாளர்களுக்குப் புதன்கிழமை (ஏப்ரல் 15) மின்னஞ்சல் அனுப்பியது.
பயண முன்பதிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் ஆகியவை ஊடுருவப்பட்டிருக்கலாம் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக இணையத்தளம் சொன்னது.
இருப்பினும், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை ஊடுருவப்படவில்லை.
தகவல் ஊடுருவல் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புக்கிங்.காம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், முன்பதிவுகள் செய்த வாடிக்கையாளர்களுக்கு புதிய மறை எண்களை அனுப்பியதாகவும் நிலைமையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடதாகவும் புக்கிங்.காம் தெரிவித்தது.
புக்கிங்.காம் அல்லது ஹோட்டல்களிலிருந்து வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இணையத்தளம் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியது.
மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் போன்றவை மூலம் கடன் அட்டை போன்ற விவரங்களை புக்கிங்.காம் ஒருபோதும் கேட்காது என்று இணையத்தளம் வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
ஹோட்டல் பிரதிநிதிகள்போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்கள் புக்கிங்.காம் இணையத்தளம்வழி நேரடியாகத் தொடர்புகொண்டதாக வாடிக்கையாளர்கள் சிலர் இதற்குமுன் புகார் அளித்தனர்.
முன்பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள மோசடித் தளத்திற்குச் செல்லும்படி போலியான இணைப்பு முகவரியை மோசடிக்காரர்கள் அனுப்புகின்றனர்.

