செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்க பயிற்சி முகாம்: அமைச்சு

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்க பயிற்சி முகாம்: அமைச்சு

2 mins read
‘ஏஐ’ வழியாக நடைமுறைக்கேற்ற திட்டங்களைச் செயல்படுத்தி நிகழ்நேரச் சவால்களுக்கு உடனடி தீர்வுகளை எட்ட பயிற்சி உதவும்: அமைச்சு
d340c1d3-c68b-4d85-ad3e-1110d0f59abd
“ஒருசில நிறுவனங்கள் மட்டுமல்லாது அதிக நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவால் பலனடைய வேண்டும்,” என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு 
Google News Preferred Icon

சிங்கப்பூர் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகப் பயிற்சி முகாம்களைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

ஆரம்பத் திட்டம் போஸ்டன் கன்சல்டிங் குழுமம், இவய்-பார்த்திநன் ஆகிய இரு நிறுவனங்களுடன் தொடங்கும். மேலும் பல நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைய வகை செய்யப்படும்.

பயிற்சி முகாமின் தொடக்கவிழாவில் இதன் விவரங்களைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு (IMDA) வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வெளியிட்டது.

மின்னிலக்கத் தலைவர்களை முடுக்கிவிடும் பயிற்சிமுகாம் (DLAB) உள்ளூரில் இயங்கும் சிறிய நடுத்தர நிறுவனங்களின் (SMEs) செயற்கை நுண்ணறிவுத் திறனை ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்தெடுக்கும் இலக்கு கொண்டது.

பயிற்சிகளில் பங்கெடுப்போருக்கு செயற்கை நுண்ணறிவுடன் மின்னிலக்கத்துக்கான மாறுதலை நிர்வகிக்கும் வழிவகைகள், அதனைக் கையாளும் திறன், வரையறைகள், பயன்பாட்டுக்கென தனிப்பட்ட சாதனங்கள் ஆகியன வழங்கப்படும். பணியிடத்தில் நிகழும் சூழலுக்கு ஏற்ப பயிற்சிகள் நடத்தப்படும் என்று அமைச்சு விளக்கியது.

செயற்கை நுண்ணறிவை கட்டமைத்து நடைமுறைக்கேற்ற திட்டங்களைச் செயல்படுத்தி உண்மையான நிகழ்நேர சவால்களுக்கு உடனடி தீர்வுகளை வடிவமைக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்போர் கற்றுக்கொள்வர்.

“ஒருசில நிறுவனங்கள் மட்டுமல்லாது அதிக நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவால் பலனடைய வேண்டும்,” என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.

தற்போதுள்ள நிலையில் 15 விழுக்காடு எஸ்எம்இ நிறுவனங்களே ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது அதனை ஏற்றுள்ள பெருநிறுவனங்களின் எண்ணிக்கையில் கால்பங்குதான் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடக்க நிகழ்ச்சியில் ஏறத்தாழ 200 நிறுவனங்களுக்குமேல் கலந்துகொண்டன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை ஏற்றுச் செயல்படுத்த 2,000 மின்னிலக்கத் தலைவர்களை உருவாக்குவது அமைச்சின் முக்கிய இலக்கு. அதனை அடைய இத்திட்டம் உதவும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்