ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்தது போர்னியோ மோட்டோர்ஸ்

ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்தது போர்னியோ மோட்டோர்ஸ்

2 mins read
2a2bb168-e3ac-4360-be3a-5a2e7ffcd329
லெங் கீ ரோட்டில் உள்ள டொயோட்டா கார் காட்சியகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

போர்னியோ மோட்டோர்ஸ் நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்கள் சிலரைக் கடந்த மாதம் 30ஆம் தேதி ஆட்குறைப்புச் செய்திருக்கிறது.

இதுகுறித்த பேச்சு நடைபெறுவதால், எத்தனை பேர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர் என்பதைத் தெரிவிக்க நிறுவனத்தின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.

டொயோட்டா, லெக்சஸ் கார்களை போர்னியோ மோட்டோர்ஸ் நிறுவனம் விநியோகிக்கிறது.

உலக அளவில் வாகனங்களை விநியோகிக்கும் இஞ்ச்கேப் நிறுவனத்தின் ஒரு பிரிவே போர்னியோ மோட்டோர்ஸ்.

“வாடிக்கையாளர்களுக்கும் பங்காளித்துவ நிறுவனத்தாருக்கும் சேவைகளை வழங்க வணிகம் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தின் அமைப்பை இஞ்ச்கேப் மதிப்பாய்வு செய்துள்ளது. இதன் விளைவாக, எங்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் தற்போதைய தேவைகளுடனும் எதிர்கால முன்னுரிமைகளுடனும் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்படவும் இலக்குவைத்து மாற்றங்களை நாங்கள் செய்து வருகிறோம்,” என்று அதன் பேச்சாளர் கூறினார்.

போர்னியோ மோட்டோர்ஸ் நிறுவனத்திற்குத் தொழிற்சங்கம் உள்ளது. சிங்கப்பூர் உடலுழைப்பு, வணிகச் சேவை ஊழியர் சங்கத்தின்கீழ் அது வருகிறது.

நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பே தொழிற்சங்கத்திடம் அதுபற்றித் தெரிவித்ததாக ஊழியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஏண்டி லிம் கூறினார்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு ஏற்ப, ஊழியர்களுக்குத் தகுந்த இழப்பீடு கொடுக்கப்படுவதை உறுதிசெய்யத் தொழிற்சங்கம், போர்னியோ மோட்டோர்ஸ் நிறுவனத்துடன் பணியாற்றியதாகவும் அவர் சொன்னார்.

மறுசீரமைப்பு அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் முடிந்தவரை முன்கூட்டியே பேசி, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும் திரு. லிம் கூறினார்.

முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, தேசியத் தொழிற்சங்க காங்கிரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வழிவகுக்கும் என்று அவர் சொன்னார். ஊழியர்களின் கடைசி வேலை நாளுக்கு முன்பே அவர்களைச் சந்தித்துப் பேசவும் விரைவில் ஆதரவளிக்கவும் அது வழிவிடும் என்றார் திரு லிம்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள், இந்த மாற்றத்திற்குத் தயாராவதற்கும் தேவைப்பட்டால் உதவி பெறுவதற்கும் அதிக நேரத்தைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வாகனம்கார்நிறுவனம்ஆட்குறைப்பு