போத்தல்கள், பானக்கலன்களில் மறுசுழற்சி முத்திரை இல்லை

போத்தல்கள், பானக்கலன்களில் மறுசுழற்சி முத்திரை இல்லை

படம்: சாவ்பாவ்

01 Apr 2026 - 9:41 pm

2 mins read

சிங்கப்பூரில் போத்தல்களையும் பானக்கலன்களையும் மறுசுழற்சி செய்ய கைகொடுக்கும் இயந்திரங்களின் பயன்பாடு ஏப்ரல் 1ஆம் தேதி முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

‘10சி எஸ்ஜி ரிட்டர்ன்’ (10c SG Return) என்ற முத்திரை உள்ள போத்தல்களையும் பானக்கலன்களையும் இயந்திரங்களில் போட்டு வாடிக்கையாளர்கள் 10 காசைத் திரும்ப பெறலாம். 150 மில்லிலிட்டரிலிருந்து மூன்று லிட்டர்வரை கொள்ளளவு கொண்ட போத்தல்களுக்கும் பானக்கலன்களுக்கும் 10 காசு கிடைக்கும்.

எனினும், பேரங்காடிகள், உணவங்காடி நிலையங்கள், கடைகள் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதனை செய்த 20 இடங்களில் விற்கப்பட்ட போத்தல்களிலும் பானக்கலன்களிலும் அத்தகைய முத்திரை காணப்படவில்லை.

அத்தகைய போத்தல்களையும் பானக்கலன்களையும் இயந்திரத்தில் போட்டால்தான் வாடிக்கையாளர்களின் இசி-லிங் அட்டைகளுக்கும் டிபிஎஸ் பேலா! இணையப் பணப்பைக்கும் அந்த 10 காசு போடப்படும்.

தீவெங்கும் 1,000க்கும் அதிகமான போத்தல், பானக்கலன் மறுசுழற்சி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அங் மோ கியோ, மேஃபிளவர் சந்தை, உணவங்காடி நிலையம், பார்க்வே பரேட் உள்ளிட்ட இடங்களில் போத்தல்களிலும் பானக்கலன்களிலும் ‘10சி எஸ்ஜி ரிட்டர்ன்’ முத்திரை இல்லை.

மாறாக, எவியன் தண்ணீர்ப் போத்தல், ஸ்னேப்பல் பானக்கலன்கள், இளநீர் உள்ள கலன்கள் ஆகிய வெளிநாட்டுப் போத்தல்களிலும் பானக்கலன்களிலும் மறுசுழற்சித் திட்டத்துக்கான முத்திரைகள் உள்ளன. ஆனால், அவற்றை உள்ளூர் இயந்திரங்களில் திரும்பச் செலுத்தி 10 காசைப் பெற முடியாது.

சிங்கப்பூர் முத்திரை இல்லாத பானங்களுக்குக் கூடுதலாக 10 காசை வசூலிக்கப்போவதில்லை என்று பானக் கடைக்காரர்கள் தெரிவித்தனர். பேரங்காடிகளும் பானங்களுக்குக் கூடுதலாக 10 காசை வசூலிக்கப்போவதில்லை என்றன.

ஒருசில வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் முத்திரை இல்லாத பானக்கலன்களை இயந்திரங்களில் செலுத்த முயன்றனர். ஆனால், முத்திரை இல்லாத அனைத்து போத்தல்களையும் பானக்கலன்களையும் இயந்திரங்கள் நிராகரித்தன.

இதற்கிடையே, முத்திரை உள்ள போத்தல்களையும் பானக்கலன்களையும் வர்த்தகர்கள் அனைவரும் கட்டங்கட்டமாக கடைகளில் அறிமுகப்படுத்திவருவதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் பானக்கலனைத் திரும்பதரும் திட்டத்தின் இயக்குநர்களும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்