ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ‘கெனோப்பி வாக்’ வலை சாகசத் தளத்தில் ஆறு வயது சிறுவன் விழுந்ததில் அவனது மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வலை சாகசத் தளத்தைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். சாகசத் தளத்தில் இருக்கும் சிறுவர்களை அவர்களது பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று அச்சிறுவன் தமது தாயார் மற்றும் 9 வயது சகோதரருடன் வலை சாகசத் தளத்துக்குச் சென்றான்.
வலை சாகசத் தளத்தில் அவன் ஓடியதாகவும் மரப்பலகை மீது விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமது மகனின் முகம் முழுவதும் ரத்தமாக இருந்ததாகவும் அவன் கதறி அழுததாகவும் சிறுவனின் தாயார் கூறினார்.
ஜுவல் சாங்கி விமான நிலைய ஊழியர்கள் தமது மகனுக்கு உடனடியாக முதலுதவி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
சிறுவனுக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவனது தந்தை கூறினார்.
தமது மகனுக்கு 30க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காயமடைந்த சிறுவன் குறித்து அக்கறை கொள்வதாகவும் அவனது குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

