ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த காதல் உறவு முறிந்ததை அடுத்து, தனது முன்னாள் காதலிக்குத் தாம் செலவிட்ட $468,090 பணத்தைத் திரும்பப் பெறக் கோரி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 9) அளிக்கப்பட்ட தீர்ப்பில், தமது முன்னாள் காதலியான ஃபெலிஷியா லீக்குச் செலவிட்ட தொகையைக் கடனாகக் கருதித் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற சந்தர் அகர்வாலின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அகர்வால் கோரிய மொத்தத் தொகையில், $206,000 கடன் பற்று அட்டைச் செலவுகள், $129,000 வெளிநாட்டுப் பயணச் செலவுகள், பெண்ணின் வீட்டிற்கு ஃபெங் ஷுவே நிபுணரை வரவழைக்கச் செலவிடப்பட்ட $17,000 மற்றும் ஸ்டான்ஃபர்ட்-சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நிர்வாகப் பயிற்சித் திட்டத்திற்கான $30,000 கட்டணம் ஆகியவை அடங்கும்.
மேலும், பெண்ணின் முன்னாள் முதலாளிக்கு இருந்த கடனை அடைப்பதற்காக தாம் $50,000 கடன் கொடுத்ததாக அகர்வால் கூறியது உட்பட, மேலும் இரண்டு தொகைகளைக் கொடுத்ததாக நிரூபிக்க அவர் தவறிவிட்டார் என்று நீதிபதி தெரிவித்தார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய இந்தத் தொகைகளைக் கடனாகக் கேட்டுப் பெற்றார் என்றோ அல்லது திரும்பத் தருவதாக ஒப்புக்கொண்டார் என்றோ காட்டுவதற்கு எவ்வித ஆதாரத்தையும் அகர்வால் சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தையிலும் மும்பைப் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ள ‘டிசிஐ எக்ஸ்பிரஸ்’ என்ற இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மேலாண்மை இயக்குநராகவும் அகர்வால் பணியாற்றி வருகிறார்.
பிரதிவாதியான ஃபெலிஷியா லீ, முன்னாள் விமானப் பணிப்பெண் ஆவார். பின்னர் அவர் காப்புறுதி முகவராகவும் மருத்துவ விற்பனை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
இருவரும் முதன்முதலில் 2019ஆம் ஆண்டு விமானப் பயணத்தின்போது சந்தித்தனர். பின்னர் அகர்வால் ஃபேஸ்புக் வழியே லீயைத் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து, இருவரும் நேரில் சந்திக்கத் தொடங்கினர்.
செப்டம்பர் 2022ல் தொடங்கிய அவர்களின் காதல் உறவு, லீ நம்பிக்கைத் துரோகம் செய்ததாக அகர்வால் சந்தேகப்பட்டதை அடுத்து, டிசம்பர் 2023ல் முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, அகர்வால் 2024 மார்ச் மாதத்தில் இந்த வழக்கைத் தொடுத்தார். அகர்வால் லீக்கு விருப்பப்பட்டு வழங்கிய பெரும்பான்மையான தொகைகள் பரிசுகளே தவிர கடன்கள் அல்ல என்று மூத்த நீதிபதி லீ சியூ கின் தமது எழுத்துபூர்வத் தீர்ப்பில் உறுதியாகத் தீர்ப்பளித்துள்ளார்.

