காலாங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் காணாமல்போன 13 வயதுச் சிறுவனின் உடல் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) இரவு மீட்கப்பட்டது.
புதன்கிழமை பிற்பகலில் அந்தச் சிறுவன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 24 மணி நேரத்திற்கும் மேலான பிறகு, அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது.
காலாங் ஆற்றில் உடல் ஒன்று மிதந்துகொண்டிருந்தது குறித்து வியாழக்கிழமை (பிப்ரவரி 26) இரவு 10.35 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
அதிகாரிகள் சிறுவனின் மரணத்தைச் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தனர்.
இதற்கு முன்னர், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ‘டார்ட்’ (DART) எனப்படும் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களும் தீயணைப்பாளர்களும் சம்பவ இடத்தில் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தமிழ் முரசு அறிந்தது.
கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 25) நான்கு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த தேடல் பணிகளுக்குப் பிறகு, இரவு நேரம் காரணமாகப் பாதுகாப்புக் கருதி அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்றும், மறுநாள் காலை தேடல் பணிகள் தொடர்ந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

