வசதிகுறைந்த குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவு நல்கும் சிறுவர் படை

2 mins read
f53c67f4-8900-4a4b-845e-279a5f4d3383
துணைப்பிரதமர் கான் கிம் யோங் (இடமிருந்து இரண்டாமவர்) அன்பளிப்புப் பையை இளையர் ஒருவருக்கு வழங்குகிறார். - படம்: சிறுவர் படை

நந்தினி சுவாமிநாத ராஜா

வசதி குறைந்தோருக்கு கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் அன்பளிப்புகளைப் பகிர்வதற்கான சிறுவர் படையினரின் (Boy’s Brigade) அன்பளிப்பு வழங்கும் திட்டம், 37வது ஆண்டாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

குதூகலத்தை எல்லோருக்கும் பரப்பும் நோக்கத்துடன் அதிகபட்சமாக 50,000க்கும் மேற்பட்ட பயனாளர்களை அடையும் இலக்கை இந்த ‘ஷேர்-அ-கிப்ட்’ (Share a Gift) திட்டம் கொண்டுள்ளதாக சிறுவர் படை, நவம்பர் 23ஆம் தேதி வெளியிட்ட தன் அறிக்கையில் குறிப்பிட்டது.

அத்துடன், ‘காம்­லிங்க்+’ (ComLink+) திட்டத்தின்கீழ் வாடகை வீட்டில் தங்கும் குடும்­பத்­தி­னருக்கு உதவும் சிறுவர் படை, உதவிபெறும் இத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிக்கவுள்ளது.

அன்பளிப்புத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் வருகை தந்து சிறப்பித்தார்.

சுவா சூ காங்கிலுள்ள உடற்குறையுள்ளோருக்கான பராமரிப்பு நிலையமான ‘சன்-டக்’கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைப் பிரதமர் கானும் சில தொண்டூழியர்களும் ‘காம்கேர்’, ‘காம்லிங்க்+’ பயனாளர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினர். அத்துடன், ஆரோக்கியமான உணவுப் பொருள்களும் பயனாளர்களால் முன்னதாகக் கோரப்பட்ட சில பொருள்களும் வழங்கப்பட்டன.

வசதிகுறைந்த குடும்பங்களின் முக்கியமான தேவைகளை நிறைவுசெய்ய, 42,779 பேருக்கு ‘ஹலால்’ சான்றிதழ் அளிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட ‘டின்’ உணவு, அரிசி, உடனடியாகச் சமைக்கக்கூடிய நூடல்ஸ், குடிநீர், பிஸ்கெட் போன்ற பொருள்களைக் கொண்ட உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், ஏறத்தாழ 8,400 பேருக்கு அவர்கள் விரும்பிக் கேட்ட பொருள்கள் தரப்பட உள்ளன. உடைகள், காலணிகள், வீட்டு வேலைகளுக்கான சாதனங்கள் போன்றவை அவர்கள் கேட்டுள்ள பொருள்களில் அடங்கும்.

பொதுமக்கள் மேலும் பலரைச் சென்றடைந்து அவர்களது தேவையை மேலும் சிறப்பாக நிறைவு செய்ய சிறுவர் படை முயல்வதாகக் கூறிய அதன் தலைவர் திரு ஹென்ரி டான், “நம் சமூகத்தினரிடையே ஈகை குணம் ஏற்படுத்தும் தாக்கம் இவ்வேளையில் நமது நினைவுக்குத் திரும்புகிறது,” என்றார்.

“குடும்பங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் ஏன் அனைவருமே வாகனங்களுடன் அல்லது வாகனங்கள் இல்லாமலும் தொண்டு புரியும் வாய்ப்புகளில் பங்கேற்க முடியும்,” என்றார்.

ஆறு கடைத்தொகுதிகளில் உள்ள ‘என்டியுசி ஃபேர்பிரைஸ்’ பேரங்காடிகளில் பொதுமக்கள் உணவுப் பொருள்களைத் தந்து உதவலாம். அங் மோ கியோ ஹப், ஜுரோங் பாயிண்ட், காலாங் வேவ் மால், நெக்ஸ், பெடோக் மால், தாம்சன் பிளாசா ஆகியவை அந்த ஆறு கடைத்தொகுதிகள்.

உதவிப்பொருள்களைச் சமர்ப்பிக்கவேண்டிய முகப்புகள் 23 நவம்பர் முதல் 16 டிசம்பர் வரை, தினமும் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்