கோழி குறுக்கே ஓடியதால் ‘பிரேக்’: பயணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கோழி குறுக்கே ஓடியதால் ‘பிரேக்’: பயணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 9:33 pm

2 mins read

ஹாலந்து சாலையில் கோழி ஒன்று திடீரெனக் குறுக்கே ஓடியதால், முன்னால் சென்ற வாகனம் பிரேக் போட்டு நின்றது. அதன் பின்னால் வந்துகொண்டிருந்த தனியார் வாடகைக் கார் ஓட்டுநரும் மோதலைத் தவிர்ப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தினார்.

ஆனால், காரில் பயணம் செய்த பயணிக்கு அந்தத் திடீர் நிறுத்தம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஓட்டுநரின் கவனக்குறைவால் தனக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி அவர் மீது அப்பயணி வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது, சாலையைக் கடந்த அந்தப் பறவையின் அடையாளம், அதன் செயல்பாடு குறித்தே இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது சாலையில் நின்றிருந்த கோழி என்று பயணி குறிப்பிட்ட நிலையில், அது சாலையின் குறுக்கே பறந்து சென்ற சேவல் என்று ஓட்டுநர் வாதிட்டார்.

இருப்பினும், இவ்வழக்கை விசாரித்துப் பின்னர் தள்ளுபடி செய்த நீதிபதி, எவ்வித சலனமுமின்றி அப்பறவையைச் சாதாரணமாக ஒரு ‘கோழி’ என்றே குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நிகழ்ந்தது. திரு டான் டெங் கியாட் ஓட்டிச் சென்ற தனியார் வாடகைக் காரில் திருவாட்டி இவோன் சென் கியான்யுன் பயணம் செய்தார். அப்போது கோழி சாலையின் குறுக்கே சென்றதால் காரைத் திடீரென நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னால் சென்ற வாகனத்திலிருந்து பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க திரு டான் தவறியதாலேயே, மோதலைத் தவிர்க்க அவர் மிகக் கடுமையாகவும் திடீரெனவும் காரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் திருவாட்டி சென் வாதிட்டார்.

மேலும், அவர் பிரேக் போட்ட விதமும் அதன் வேகமும் நியாயமான அளவைவிட அதிகமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், தாம் மணிக்கு ஏறத்தாழ 50 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாகவும் முன்னால் சென்ற வாகனத்துக்கும் தமது காருக்கும் இடையே கிட்டத்தட்ட 10 மீட்டர் இடைவெளி விட்டதாகவும் திரு டான் தெரிவித்தார்.

திருவாட்டி சென்னின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சட்டச் செலவுகளுக்காகவும் பொருள், சேவை வரி மற்றும் இதர செலவுத் தொகைக்காகவும் $15,000 வழங்குமாறு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்துள்ள திருவாட்டி சென், தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்