தோ பாயோ காப்பிக் கடை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை நடைபெற்ற கைகலப்பு தொடர்பாக மூன்று ஆடவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
தோ பாயோ லோரோங் 7ல் உள்ள புளோக் 10பி-யில் சண்டை நடப்பதாகக் காலை 9.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை கூறியது.
சம்பவத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்களைக் கைது செய்தனர்.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று ‘எஸ்ஜி சீக்ரெட்’ என்னும் டெலிகிராம் தளத்தில் பதிவேற்றப்பட்டது.
காப்பிக் கடையில் நிகழ்ந்த கைகலப்பில் 10 பேர் ஈடுபட்டதை அதில் காணமுடிந்தது.
கடையில் இருந்த நாற்காலியையும் இரண்டு மேசைகளையும் மூன்று பேர் தூக்கி, கீழே எறிந்து நொறுக்கியதையும் உரக்கக் கத்தியதையும் காணொளி காட்டியது.
கருநீல நிற சட்டை அணிந்த ஒருவரை ஓர் ஆடவர் குத்த முயன்றதும் மற்றோர் ஆடவர் கையில் இருந்த பொருளால் அவரைத் தாக்குவது போலவும் காணொளிப் படத்தில் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
மற்றவர்கள் கைகலப்பை விலக்கிவிட முயன்றதையும் அதில் காணமுடிந்தது.
சம்பவ இடத்தில் நாற்காலிகளும் மேசைகளும் உடைந்து கிடந்தன. சில நாற்காலிகளில் ரத்தக் கறை காணப்பட்டது. உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் அங்கு காணமுடிந்தது.